

வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே; அது எப்போதும் மனமுதிர்ச்சியைத் தீர்மானிப்பதில்லை. சிலர் இளம் வயதிலேயே மிகுந்த பக்குவத்துடன் காணப்படுவார்கள், சிலர் முதிர்ந்த வயதிலும் தடுமாறுவார்கள். ஒரு பக்குவமுள்ள மனிதரை அடையாளம் காண உதவும் 12 முக்கிய பண்புகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பொறுப்பேற்கும் பண்பு: தங்கள் வாழ்க்கையில் நடக்கும் இன்ப, துன்பங்களுக்கு தாங்களே பொறுப்பேற்பது மனமுதிர்ச்சியின் முதல் அடையாளம். தங்கள் தோல்விகளுக்காகப் பெற்றோரையோ, வளர்ப்பு முறையையோ அல்லது சூழ்நிலையையோ இவர்கள் குறை கூற மாட்டார்கள். கடந்த காலத்தைக் குறித்து வருந்தாமல், எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிகளாகத் திகழ்வார்கள்.
2. நிதானமாகச் செயல்படுவது: சின்னஞ்சிறு தொந்தரவுகளையும், எரிச்சலூட்டும் செயல்களையும் இவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் கூட, பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்படுவார்கள். தேவையற்ற சண்டைகளைத் தவிர்த்து, சிக்கல்களைப் புத்திசாலித்தனமாகத் தீர்ப்பார்கள்.
3. பரிபூரணத்தை எதிர்பார்க்காத குணம்: தன்னிடமோ அல்லது பிறரிடமோ 100 சதவிகிதம் குறையே இல்லாத ‘பரிபூரணத்தை’ (Perfection) இவர்கள் எதிர்பார்ப்பதில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு போராட்டம் இருக்கும் என்பதை உணர்ந்து, மற்றவர்களிடம் இரக்கத்துடனும் மன்னிக்கும் குணத்துடனும் பழகுவார்கள்.
4. பிறரின் அங்கீகாரத்தைத் தேடாமை: மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று இவர்கள் கவலைப்படுவதில்லை. பிறரை மகிழ்விப்பதற்காகத் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சமூகத்தின் அங்கீகாரத்தை விட தனது கொள்கைகளுக்கு மதிப்பு தருவார்கள். அதன்படி செயல்படுவார்கள்.
5. உணர்ச்சிக் கட்டுப்பாடு: திடீரென கோபப்படுவது அல்லது ஆத்திரப்பட்டு எதிர்வினை ஆற்றுவதற்குப் பதிலாக, உணர்ச்சிகளை நிதானமாக ஆளத் தெரிந்தவர்கள் இவர்கள். விவாதங்களின்போது கூட அமைதியாகத் தங்கள் கருத்துகளை முன்வைப்பார்கள்.
6. ஆரோக்கியமான எல்லைகள் (Setting Boundaries): அனைத்திற்கும் ‘சரி’ என்று தலையாட்டாமல், தேவைப்படும் இடத்தில் ‘இல்லை’ என்று சொல்லத் தெரிந்தவர்கள். பிறரைத் திருப்திப்படுத்துவதற்காகத் தங்கள் நேரத்தையோ, சுயமரியாதையையோ ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
7. அறிவுசார் பணிவு: தமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காமல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் பண்பு இவர்களிடம் இருக்கும்.
8. விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதம்: யாராவது விமர்சனம் செய்தால், அதைத் தனிப்பட்ட தாக்குதலாகப் பார்க்காமல் நடுநிலையோடு ஆராய்வார்கள். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், அதைத் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் கருவியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
9. தெளிவானத் தகவல் தொடர்பு: மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி நேர்மையாகவும் தெளிவாகவும் பேசுவார்கள். மற்றவர்கள் தன் மனதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காமல், தனது தேவைகளையும் உணர்வுகளையும் நாகரிகமாக வெளிப்படுத்துவார்கள்.
10. நேரத்திற்கும் அனுபவத்திற்கும் முன்னுரிமை: பொருட்களையும் உடமைகளையும் மதிப்பதை விட, நல்ல அனுபவங்களுக்கும் நேரத்திற்கும் அதிக மதிப்பு தருவார்கள். இவர்கள் நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும், மனசாட்சியுடன் நடப்பதிலும் உறுதியாக இருப்பார்கள்.
11. பிறரின் வெற்றியைத் துதித்தல்: மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு இவர்கள் பொறாமைப்படுவதில்லை. அடுத்தவர்களின் சாதனையை மனதாரப் பாராட்டுவார்கள். பிறரின் வெற்றி, தங்களை ஒருபோதும் சிறுமைப்படுத்தாது என்பதில் இவர்கள் தெளிவாக இருப்பார்கள்.
12. சுய பரிசோதனை மற்றும் முன்னேற்றம்: தங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களைத் துல்லியமாக அறிந்திருப்பார்கள். நேற்றைய விட இன்று ஒரு சிறந்த மனிதராக மாற வேண்டும் என்பதே இவர்களது இலக்கு. பரிபூரணத்தை அடைய முயற்சிப்பதை விட, தொடர்ச்சியான முன்னேற்றத்தையே இவர்கள் விரும்புகிறார்கள்.