

தேவையற்றவற்றை நீக்கி, அத்தியாவசியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தும் மினிமலிஸ்ட்கள் எனப்படும் எளிமைவாதிகள் தங்கள் வீட்டை அழகுறப் பராமரிப்பதற்கு கையாளுகின்ற 8 வழிமுறைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. தேவையற்ற விளம்பர நோட்டீஸ்கள் மற்றும் செய்தித்தாள்களை ஒவ்வொரு வார இறுதி நாளிலும் அடுக்கியெடுத்துக் கட்டி, பழைய பேப்பர் வாங்குபவரிடம் தவறாமல் கொடுத்துவிடுவர். இதனால் வீட்டின் முன் அறை விசாலமானதாகவும் சுத்தமாகவும் தோற்றமளிக்கும்.
2. பொருட்கள் வாங்கும்போது தரும், பில் மற்றும் ரசீதுகளில், தேவையில்லாதவற்றை அவர்கள் ஒரு வாரத்திற்கு மேல் பாதுகாத்து வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. 'தேவைப்படலாம்' என நினைப்பவற்றைக் கூட போனில் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு, உடனுக்குடன் அவற்றை வெளியேற்றிவிடுவர். அன்றாட வாழ்வில் மேலும் மேலும் வந்து சேரும் பில்களுடன் பழையதும் சேர்ந்து குவியலாகி இடத்தை ஆக்ரமிப்பதை அவர்கள் விரும்புவதில்லை.
3. மளிகைக் கடை மற்றும் காய்கறிக் கடையிலிருந்து பொருட்கள் வாங்கி வரும்போது வந்து சேரும் பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பைகளையும் அவர்கள் பத்திரப்படுத்துவதில்லை. மறு உபயோகத்திற்கு பயன்படும் வகையில் உள்ள ஒன்றிரண்டை மட்டும் பைக்கில் அல்லது கதவுக்குப் பின்புறம் கண்களுக்குப் புலப்படாத வகையில் ஒரு கொக்கியில் மாட்டி வைத்துக்கொள்வார்கள்.
4. மினிமலிஸ்ட்கள் கத்தரிக்கோல் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை ஒன்றிற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி வைத்துக்கொண்டால், அவை அனாவசியமாக இடத்தை அடைத்துக்கொண்டு ஒழுங்கற்ற தோற்றம் தருவதுடன், நாளடைவில், உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால் பழுதாகிவிடும் வாய்ப்பும் உண்டாகும் என்பது அவர்களின் கணிப்பு.
5. வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தெடுத்த துணிகளுக்கு நடுவே ஒரு ஒற்றை காலுறை (sock) தென்பட்டால், அதை வைத்திருந்து, அடுத்த முறை துவைத்தெடுத்த துணிகளுக்கிடையே மற்றொன்று உள்ளதா என்று பார்ப்பர். இல்லை என்றால் அந்த ஒற்றை காலுறையை ட்ராஷ் (trash) கூடையில் சேர்த்து விடுவர்.
6. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ள வீடுகளில், குழந்தைகள் படம் வரையும் மற்றும் கிறுக்கி எறியும் காகிதங்கள் ஏகமாக குவியும். அவற்றை மேஜையின் ஓர் இழுப்பறைக்குள் மினிமலிஸ்ட்கள் போட்டு வைப்பர். இழுப்பறை நிறைந்ததும், அவற்றைப் பரிசோதித்து, வைத்துக்கொள்ள வேண்டியவற்றை எடுத்துவிட்டு, மற்றவைகளை அப்புறப்படுத்தி விடுவர்.
7. தங்கள் வீட்டில் நடக்கும் பிறந்த நாள் கொண்டாட்டம் போன்ற விழாக்களுக்கு வரும் விருந்தினர்கள் அளிக்கும் பரிசுப் பொருட்கள் தங்களுக்குப் பிடிக்காததொன்றாகவோ அல்லது உபயோகமற்றதாகவோ இருந்தால் உடனடியாக அதை மற்றவர்க்கு நன்கொடையாக அளித்துவிடத் தயங்க மாட்டார்கள்.
8. காசு கொடுக்காமல் சும்மா பெறப்படும் பொருட்களை பொதுவாக அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், மினிமலிஸ்ட்கள் அதைக் கொடுப்பவர்களிடமே, ‘எங்களுக்கு இது தேவையில்லை’ என்று கூறி மறுத்து விடுவர் அல்லது வாங்கிக் கொண்டுவந்து, தேவைப்படும் பிற நபர்களிடம் கொடுத்து விடுவார்கள்.
தங்கள் வீடுகளை மாதமொரு முறை அல்லது பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ தினங்கள் வரும்போது மட்டும் சுத்தப்படுத்த நினைக்கும் பலருக்கிடையே, மினிமலிஸ்ட்கள் பின்பற்றி வரும் மேற்கூறிய வழி முறைகள் பாராட்டுக்குரியவையே!