தினசரி வாழ்க்கையில் சூழ்நிலைகள், சக மனிதர்கள், ஹார்மோன்கள் மாறுபாடு, ஏன் வானிலை மாற்றங்கள் கூட மூட் அவுட்டுக்குக் காரணமாக அமைகின்றன. இப்படி மூட் அவுட்டில் இருக்கும்போது ஒருவரால் தனது வேலையை சரியாகச் செய்ய முடியாது. இந்தப் பதிவில் ஐந்தே நிமிடத்தில் மனதை உற்சாகமாக மாற்ற உதவும் 12 வழிகளைப் பார்ப்போம்.
1. பிடித்த இசை: ஒரு கடுமையான வாக்குவாதத்தின் பின்பு மனம் சோர்வுக்கு உள்ளாகும். அப்போது சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்து மிகவும் பிடித்த பாடல்களைக் கேட்க வேண்டும். கூட சேர்ந்து பாடலாம். பாடலுக்கு ஏற்ப லேசாக நடனமாட கூட செய்யலாம். இது மனதை சட் என்று உற்சாகமான மனநிலைக்குத் திருப்பும்.
2. இயற்கையோடு இணைந்திருப்பது: மூட் அவுட் ஆனால் அந்த இடத்திலேயே தொடர்ந்து இருக்காமல் வெளியே வர வேண்டும். புதிய காற்றை சுவாசிப்பதும் சூரிய ஒளி உடலின் மேல் பட்டால் கூட உடனடியாக மனநிலையில் மாறுபாடு ஏற்படும். பசுமையான மரம், செடி, கொடிகளைப் பார்ப்பது மனதை அமைதியூட்டும். பூங்காவில் இருக்கும் நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு இவை அனைத்தும் மனதை உற்சாகமான வழிக்குத் திருப்பி விடும்.
3. பிடித்தவர்களுடன் இருப்பது: மனதுக்குப் பிடித்த தோழர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ நேரத்தை செலவிட வேண்டும். அவர்களது பேச்சு மனதிற்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் தரும்.
4. வொர்க் அவுட் செய்வது: உடற்பயிற்சி செய்யும்போது மனம் பயிற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடும். இது உடனடியான ஆற்றலையும் ஊக்கத்தையும் தரும். மன அழுத்தத்தில் மூழ்குவதை விட உடல் வியர்ப்பது மிகவும் நன்மையைத் தரும்.
5. ஆழ்ந்த சுவாசம்: மன அழுத்தத்தைக் குறைக்கவும், தளர்வை மேம்படுத்தவும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை செய்யவும். மூக்கின் வழியாக மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, சில வினாடிகள் வைத்திருந்து, வாய் வழியாக மெதுவாக வெளிவிடவும். அதேபோல ஒரு குறுகிய கால தியானத்தைப் பயிற்சி செய்யலாம்.
6. நேர்மறை காட்சிப்படுத்தல் மற்றும் உறுதிமொழிகள்: கண்களை மூடிக்கொண்டு மகிழ்ச்சியான தருணங்களைக் காட்சிப்படுத்துங்கள். திருப்தியாகவும் இனிமையாகவும் உணரும் இடத்தைக் காட்சிப்படுத்துங்கள். அங்கு இருப்பது போல கற்பனை செய்து பாருங்கள். அந்த நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கவும்.
7, உறுதிமொழிகள்: ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’, ‘நான் உற்சாகமாக இருக்கிறேன்’ என்பது போன்ற நேர்மறையான உறுதிமொழிகள் மனநிலையை மிகவும் நேர்மறையான, உற்சாகமான மனநிலைக்கு மாற்ற உதவும்.
8. உணர்வு தூண்டுதல்: சிட்ரஸ், லாவெண்டர் அல்லது மிளகுக்கீரை போன்ற நறுமணத்துடன் கூடிய அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதால் உற்சாக மனநிலையை அதிகரிக்கலாம். சுவை மொட்டுகளைத் தூண்டுவதற்கும், மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கும் டார்க் சாக்லேட் துண்டு ஒன்றை சுவைக்கலாம்.
9. மகிழ்ச்சியான செயலில் ஈடுபடுதல்: சிரிக்க வைக்கும் நகைச்சுவையான, வேடிக்கையான வீடியோ அல்லது கிளிப்பிங்ஸை காணலாம்.
10. வேடிக்கையான கேமில் ஈடுபடலாம்: பிடித்த நண்பரை அழைக்கவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்பவும். நேர்மறையான விளையாட்டுகள் போன்ற சமூகத் தொடர்புகள் மனநிலையை கணிசமாக மேம்படுத்தும்.
11. ஒருவரைப் பாராட்டுங்கள்: ஒருவருக்கு நேரிலோ அல்லது ஆன்லைனிலோ உண்மையான பாராட்டு தெரிவிக்கவும். வேறொருவரை நன்றாக உணர வைப்பது சொந்த மனநிலையை மேம்படுத்தும்.
12. நன்றியுணர்வு பயிற்சி: நன்றியுள்ள விஷயங்களைப் பட்டியலிடுங்கள். நன்றியுள்ள விஷயங்களைப் பற்றி எழுத அல்லது சிந்திக்க சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். நன்றியறிதலில் கவனம் செலுத்துவது மூட் அவுட்டை மாற்றி மகிழ்ச்சியின் உணர்வுகளை அதிகரிக்கும்.