
இன்று பலரும் வேலை, படிப்பு, தொழில் என இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருப்பதால் உறவுகளைப் பேண நேரமின்மை காரணமாகத் தவிக்கிறோம். அதிலும் கைபேசி வந்த பிறகு கடிதங்களும் மனித உறவுச் சங்கிலிகளும் அழிந்து வருகின்றன. உறவுகளின் வலிமையை உணர்ந்து அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உறவுகளை மேம்படுத்த என்னென்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மாதம் ஒரு முறை நம் குழந்தைகளை அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா போன்ற நெருங்கிய உறவினர்களின் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்.
2. நம் வீட்டிற்கு உறவினர்கள் வரும்போது, நம் குழந்தைகளையும் அழைத்து உடன் அமர வைத்து சிறிது நேரம் உரையாடலாம்.
3. குழந்தைகளிடம் உறவுகளின் மேன்மை பற்றியும் மற்றும் அவர்களுடன் நீங்கள் கழித்த நாட்கள் பற்றியும் எடுத்துச் சொல்லலாம்.
4. திருமணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும்போது, நம் குழந்தைகளை சொந்த உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுடன் பேசிப் பழக வைக்கலாம்.
5. அடிக்கடி உறவினர்களின் வீடுகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டால், அனைவரும் ஒன்றாக அமர்ந்து வீடியோ அழைப்பின் மூலம் உரையாடி மகிழலாம்.
6. பண்டிகை நாட்களில் முடிந்தவரை அனைவரும் ஒரே வீட்டில் சேர்ந்து பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்யலாம்.
7. ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்தின் அனைத்து நெருங்கிய உறவினர்களையும் அழைத்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யலாம்.
8. நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது குழந்தைகளையும் கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும்; அப்போதுதான் குழந்தைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் தெரிய வரும்.
9. நம் குழந்தைகள் சொந்த குடும்ப பந்தங்களோடு பாசத்துடன் பழகினால், நல்ல பல நற்பண்புகள் அவர்களுக்குள் வளரும்.
10. பிறந்த நாள், திருவிழாக்கள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் அனைத்து உறவினரும் ஒரே இடத்திற்கு கூடுவர். அங்கே குடும்பத்தோடு கலந்து கொள்வதனால் அவர்களுடன் நெருங்கிப் பழகவும் உறவுகளை நேசிக்கவும் உதவும்.
11. வீட்டு விசேஷ வேலைகளை குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் வயது வாரியாகப் பிரித்து சொல்லி செய்ய வைக்கலாம்; இதனால் ஒற்றுமை மற்றும் பாசம் உருவாகும்.
12. குழந்தைகளுக்கு உறவினர்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் குழந்தைகள் என்ன உறவு முறை என்று தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியம்.
13. ஒரு நாள் கைபேசியை மறந்து அனைவரும் நேரில் ஒன்றாகப் பேசி மகிழ முயலலாம். கலகலப்பு மற்றும் மன அமைதியுடன் நேரத்தை கழிக்கலாம்.