
நம் தாத்தா, பாட்டி காலத்தில் ஏழெட்டு குழந்தைகளைக் கூட சாதாரணமாக வளர்த்தார்கள். ஆனால், இன்று ஒன்றிரண்டு குழந்தைகளை வளர்ப்பது கூட பெரும் பாடாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது சவாலான பணிகளில் ஒன்றாக ஆகிவிட்டது. குழந்தைகளை எழுப்புவதிலிருந்து தூங்க வைப்பது வரை ஒவ்வொன்றுக்கும் பெற்றோர்கள் நிறைய மெனக்கிட வேண்டியுள்ளது. எவ்வளவுதான் பொறுமையாக இருந்தாலும் சில குழந்தைகள் நம் பொறுமையை சோதித்து விடுவார்கள்.
நினைத்தது நிறைவேறவில்லை என்றால் அழுது புரண்டு அடம் பிடிப்பது, பொருட்களைப் போட்டு உடைப்பது என்று ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைக் கண்டு உண்மையிலேயே இன்றைய இளம் பெற்றோர்கள் பயந்துதான் போகிறார்கள். இவர்களை எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்று கவலைப்படுகிறார்கள். உண்மையில் இவர்களை வழிக்குக் கொண்டு வருவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மிகவும் சுலபம்தான்.
அதற்கு வீட்டில் உள்ள அனைவரும் சிறிது மெனக்கிட்டால் போதும். ஒருவர் கண்டிக்கும் பொழுது மற்றொருவர் குழந்தைகளுக்கு சப்போர்ட் செய்யக் கூடாது. ‘அம்மா கிடக்கிறா, நான் வாங்கித் தருகிறேன்’ என்று சமாதானம் செய்வதாக நினைத்து அவர்களின் முரட்டுத்தனத்தை வளர்க்க அனுமதிக்கக் கூடாது.
இன்னும் சில பெற்றோர்கள் சமாளிக்க முடியவில்லை என்றால் பிள்ளைகளை அடித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் முரட்டுத்தனமாகத்தான் வளரும். இதுவும் தவறான அணுகுமுறை. இன்னும் சிலரோ பிள்ளைகளைத் திட்டி, அடித்து விட்டு பின்பு அவர்கள் கேட்டதை உடனே வாங்கித் தருகிறார்கள். சில புத்திசாலிக் குழந்தைகள் வீட்டில் கேட்டால் கிடைப்பதில்லை என்பதைப் புரிந்து கொண்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போதோ, நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு வரும்போது அல்லது நாம் அங்கு செல்லும்பொழுது பிடிவாதம் பிடிப்பார்கள்.
இதுபோன்ற சமயங்களில் பதற்றப்படாமல், சிறிதும் கோபப்படாமல், அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட வேண்டும். சிறிது நேரம் முரண்டு பிடித்துப் பார்த்து விட்டு தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தானாகவே அடங்கி விடுவார்கள். அழுது சாதிக்க நினைக்கும் குழந்தைகளை, முரண்டு பிடிக்கும் குழந்தைகளை, கோபத்தில் சிடுசிடுக்கும் குழந்தைகளை அதன் போக்கில் விட்டுதான் பிடிக்க வேண்டும்.
எதையும் கேட்டவுடன் வாங்கித் தந்தால் அதன் அருமை அவர்களுக்குத் தெரியாமல் போய்விடும். குழந்தைகளின் சின்ன அழுகையையும் தாங்க முடியாமல் கேட்பதை வாங்கிக் கொடுக்கும் பெற்றோரால், பிள்ளைகள் எதிர்காலத்தில் சின்ன ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும்.
எனவே, அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க முதலில் நாம் அமைதியாக இருக்கப் பழக வேண்டும். குழந்தையுடன் நேர்மறை கண் தொடர்பு கொண்டு பேச வேண்டும். நம் எண்ணங்களைத் தெளிவாக அவர்களிடம் வெளிப்படுத்தி, அவர்களை அமைதிப்படுத்த அவர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கலாம். இது குழந்தைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவும்.
நாம் விரும்பாத ஒன்றை குழந்தைகள் செய்ய முயற்சிக்கும்பொழுது எடுத்துச் சொல்லி புரிய வைத்து அவர்களுக்கு மாற்று வழிகளை சொல்லித் தரலாம். இது அவர்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கும். குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பதைப் பற்றிய தெளிவான விதிகளை வரையறை செய்து, அதை அவர்களிடம் மென்மையாக எடுத்துக் கூறலாம். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான். அவர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டியது நம் கடமை.