
- அனிஷா வி.எஸ்
தினமும் காலை எழுவதும் இரவு நிம்மதியாகத் தூங்க செல்வதும் கடவுள் கொடுத்த வரம் என்றே சொல்லலாம். ஆனால், அந்த நாளை நாம் பயனுள்ளதாகவும், சரியாகவும் கழித்துள்ளோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்காக நாம் சில பழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இரவு தூங்குவதற்கு முன்பும் காலை எழுந்தவுடனும் நாம் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள் என்ன என்பதைப் பற்றி காணலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டியவை:
ஒரு நாள் முழுவதும் நாம் பல விஷயங்களை அனுபவித்து, புதிய தகவல்களைத் தெரிந்து கொள்கிறோம். அந்த நாளின் நிறைவாக இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு நிமிடம் நமக்காகச் செலவிடுவது அவசியம்.
இன்றைய நாளில் என்னென்ன நடந்தது என்பதை நினைவு கூற வேண்டும். இதன்மூலம், நடந்த நல்ல விஷயங்கள், எதிர்பாராத சூழல்கள் என அனைத்தும் நம் நினைவிற்கு வந்து செல்லும்.
தவறு நடந்திருந்தால் அதற்கான காரணங்களை உணர்ந்து, அதே தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோபம், ஏமாற்றங்களை விட்டுவிட்டுத் தவறு செய்தவர்களை மனதார மன்னிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்லாமல், தேவையற்ற எண்ணங்களை எல்லாம் மறக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு நாள் முழுவதும் அலைந்து திரிந்து இரவு தூங்கும் வரையில் நம்மைப் பாதுகாத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இரவு கடவுளுக்கு நன்றி கூறிய பின்னர், அவரவர் நம்பிக்கைக்கேற்ப கடவுளின் தெய்வீக மந்திரத்தைப் பாராயணம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, திருப்புகழ் போன்ற பதிக்கத்தை படிப்பதால், ஒருவரின் மனதுள் ஏற்படும் மரண பயம் நீங்கி மனம் நிம்மதியடையும்.
இந்த பழக்கங்களைத் தினசரி இரவு நேரத்தில் தவறாமல் மேற்கொள்வதன் மூலம் மனதில் உள்ள குழப்பங்களும், கவலைகளும் நீங்கி நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.
காலை எழுந்தவுடன் செய்ய வேண்டியவை:
காலை எழுந்தவுடன் முதலில் இரண்டு கைகளைத் தேய்த்து இரு கண்களிலும் மெதுவாக ஒத்திக் கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
எழுந்தவுடனே, "கடவுளே, இன்று என்னை ஆரோக்கியமாக எழுப்பியதற்கு நன்றி" என அமைதியாக மனதிற்குள் நன்றி சொல்ல வேண்டும்.
தொடர்ந்து, நேற்று செய்த தவறுதல்களை இன்று செய்யாமல் இருக்க இறைவனை வேண்டி அந்த நாளை தொடங்க வேண்டும்.
ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் திட்டமிடுதலை முறையாகச் செய்து வருவதால் வாழ்க்கை பதற்றமில்லாமல், பரபரப்பில்லாமல் மன அமைதியுடன் சந்தோசமாக அமையும்.
இரவில் தூங்கும் முன்பும், காலை எழுந்தவுடன் மேற்கண்ட செயல்களைத் தொடர்ந்து பழகினால் ஒவ்வொரு நாளும் நன்மையுடன் தொடங்கி மகிழ்ச்சியுடன் நிறைவடையும். இதுவே நிம்மதியான வாழ்விற்குச் சிறந்து தொடக்கமாக அமைகிறது.