
குழந்தை வளர்ப்பில் கண்டிப்பும், கனிவும் சரியான அளவில் கலந்திருக்க வேண்டும். ஒருபுறம் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக கண்டிப்பது அவர்களின் மனநிலையை பாதிக்கும் என்றால், மறுபுறம் எதையும் கண்டிக்காமல் விட்டால் அவர்கள் ஒழுக்கமில்லாதவர்களாக வளர வாய்ப்புள்ளது. அப்படியானால், எப்போது பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும்?. பெற்றோர்கள் சில குறிப்பிட்ட எல்லைகளை வகுத்து, அதில் கண்டிப்பாக இருப்பது குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்கு மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கு தெளிவான விதிகளை வகுப்பது அவர்களின் மனதிற்கு ஒருவித பாதுகாப்பை அளிக்கிறது. என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்போது, பொறுப்புணர்வுடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள கற்றுக்கொள்கிறார்கள். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு நல்ல அடித்தளமாக அமைகிறது.
அதேபோல், குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கேற்ப வீட்டு வேலைகளை கொடுப்பது அவர்களுக்கு பொறுப்புணர்வை வளர்க்கும். மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்யும் மனப்பான்மையும், கடின உழைப்பின் மதிப்பையும் அவர்கள் உணர ஆரம்பிப்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேரம் திரைக்கு முன்னால் செலவிடுகிறார்கள். இதை கட்டுப்படுத்துவது அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், சமூகத்துடன் பழகவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும். 'தயவுசெய்து', 'நன்றி' போன்ற மரியாதையான வார்த்தைகளை கற்றுக்கொடுப்பதும், மற்றவர்களிடம் கருணையுடன் நடந்துகொள்ள பழக்குவதும் அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும்.
'இல்லை' என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியம். இது அவர்களுக்கு பொறுமை, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் தோல்விகளை தாங்கும் மன உறுதியை கொடுக்கும்.
சரியான தூக்க நேரத்தை பின்பற்றுவது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும், மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்க உதவும். தங்கள் செயல்களுக்கு தாங்களே பொறுப்பேற்கவும், மற்றவர்களை குறை சொல்லும் பழக்கத்தை தவிர்க்கவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொாடுப்பது அவர்களின் நேர்மை மற்றும் முதிர்ச்சியை வளர்க்கும்.
குடும்பமாக சேர்ந்து சாப்பிடும் பழக்கம் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொறுப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வையும் குழந்தைகளுக்கு அளிக்கும். சிறிய விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்லும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவர்களை நல்ல பண்புள்ளவர்களாகவும், நேர்மறை எண்ணம் கொண்டவர்களாகவும் மாற்றும்.
குழந்தை வளர்ப்பில் கண்டிப்பு என்பது சில நேரங்களில் அவசியமான ஒன்று. ஆனால் அது அன்பையும், புரிதலையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான கண்டிப்பை கொடுப்பதன் மூலம் நாம் நம் குழந்தைகளை சிறந்த எதிர்காலத்திற்கு தயார்படுத்த முடியும்.