கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் வியர்வையால் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் வியர்வையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. கோடையில் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க, தினமும் குளிப்பது, தொடர்ந்து உடைகளை மாற்றுவது போன்ற உடல் சுகாதாரம் போன்ற நல்ல பழக்கங்களை கடைபிடிப்பதோடு கீழ்கண்ட 4 வழிமுறைகளையும் கையாளலாம்:
1. எலுமிச்சை மற்றும் தயிர்:
சரியான உணவு பராமரிப்பு வியர்வையின் நாற்றத்தை தவிர்க்க உதவும். எலுமிச்சை சாறு உணவில் சேர்த்துக் கொண்டால் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை போராடி அழிக்கிறது. இதேபோல் தயிரையும் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் பாதை தொற்றுக்கு தயிர் உட்கொள்வது மிகவும் நல்லது.
2. குளியல் நீரில் இதை சேர்க்கலாம்:
வேப்ப இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க தினமும் வேப்பிலை கலந்த தண்ணீரில் குளிக்கவும். அவை வியர்வை மூலம் வளரும் பாக்டீரியாக்களை வளராமல் தடுக்கின்றன. இது தவிர, வேப்பிலை தண்ணீர் கோடையில் சரும தொற்றுகளிலிருந்தும் உங்களை பாதுகாக்கும். அதேபோல், நீங்கள் குளிக்க பயன்படுத்தும் குளியல் நீரில் ரோஸ்வாட்டர் சிறிது கலக்கலாம். ரோஸ் வாட்டர் லேசான நறுமணத்தைத் தருவதோடு, கோடை காலத்தில் உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க உதவி செய்யும்.
3. படிகார கற்கள்:
உங்களுக்கு அதிகமாக வியர்த்தால், குளிப்பதற்கு முன், ஒரு துண்டு படிகாரத்தை எடுத்து தண்ணீரில் நனைத்து, உங்கள் அக்குளில் சுமார் 5 முதல் 8 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது பாக்டீரியாக்களைக் கொன்று, கோடையில் உங்களை துர்நாற்றம் இல்லாமல் வைத்திருக்கும். இது தவிர, தண்ணீரில் படிகாரம் கலந்து குளிப்பது தோல் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்.
4. யூகலிப்டஸ் எண்ணெய்:
வியர்வை மூலம் வெளியேறும் வாசனையைத் தவிர்க்க, நீங்கள் குளியல் நீரில் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்க்கலாம். இவை வியர்வை மூலம் வெளியேறும் துர்நாற்றத்தை நீக்குவதோடு, பல வகையான பூஞ்சை தொற்றுகளிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
மேற்கூறிய 4 வழிமுறைகளை கையாள வியர்வையால் ஏற்படும் வேதனைகளை தவிர்க்கலாம்.வியர்வை