குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஒவ்வொரு பெற்றோரின் அணுகுமுறையும் மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு சரி எது தவறு எது எனத் தெரியாமல் மென்மையானவர்களாக இருப்பதால் பெற்றோர்களைப் பார்த்து அவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டு வளர்கிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன்பு பெற்றோர்கள் செய்யக்கூடாத தவறுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தூங்கும் முன் குழந்தைகளிடம் கத்தக்கூடாது: குழந்தைகள் தூங்கும் நேரம் மிகவும் முக்கியம் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. குழந்தைகள் தூங்கும் நேரம்தான் அவர்களுக்கு சார்ஜ் செய்து மனதிற்குள் புதிய ஆற்றலை தருவதற்கு உகந்த நேரம் ஆகும். குழந்தைகள் தூங்குவதற்கு முன் பெற்றோர்களின் அன்பையும் பாதுகாப்பான சூழலையும் பெற விரும்புகிறார்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தூங்க வைப்பதற்கு முன்பு அவர்களுடன் விளையாடி மனநிலையை மகிழ்ச்சியாக்கி தூங்க வைப்பதால் குழந்தை ஆழ்ந்த உறக்கத்தைப் பெறும். இதன் காரணமாக அவர்கள் விரைவில் உடல் வளர்ச்சி அடைகிறார்கள். ஆகவே, தூங்கும் முன்பு குழந்தைகளிடம் கத்தவோ, திட்டவோ, கண்டிக்கவோ கூடாது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர்கள் அவசியம் இதைத் தவிர்க்க வேண்டும்.
2. உறுதியான பிணைப்பு: பெற்றோர் - குழந்தைகளுக்கான உறவு வலுவானதாக இருக்க வேண்டும். இதற்காக அன்றைய நாளை பெற்றோர்கள் நேர்மறையான செயல்களுடன், அதாவது அன்றைய நாளின் நிகழ்வுகளை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது போன்ற விஷயங்களைச் செய்து முடிப்பதால் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வைப் பெறுகிறார்கள். இதனால் குழந்தைகள் பெற்றோருக்கான உறவு உறுதியான பிணைப்பை ஏற்படுத்துகிறது.
3. பய உணர்வு: குழந்தைகளிடம் பெற்றோர் கோபப்படுவதும் எரிச்சல் அடைவதும் அவர்களுக்கு பய உணர்வை ஏற்படுத்தும் என்பதால் அதன் காரணமாக குழந்தைகள் பொய் சொல்லக் கற்றுக் கொள்கிறார்கள். ஆதலால் குழந்தைகளை அதிகமாக திட்டுவதும் கண்டிப்பதும் அவர்களிடமிருந்து உங்களை விலக்கி வைக்கும்.
4. கனவுகளின் விளைவு: குழந்தை இரவில் தூங்கும் மனநிலையில் கனவுகளைக் காண்கிறது என்றும் நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே, குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் தூங்க வைக்கவும். இதனால் குழந்தைகள் நல்ல கனவுகளைக் கண்டு ஆழ்ந்து உறங்குவார்கள்.
குழந்தைகளை நிம்மதியாக தூங்க வைக்கும் முறை: குழந்தைகள் விளையாடி களைப்பாக இருக்கும்போதுதான் தூங்கச் செல்வார்கள் என்பதால் அவர்களைக் கட்டாயப்படுத்தி தூங்க வைக்கக் கூடாது. தூங்க வைக்கும் முன்பு குழந்தைகளுக்கு அழகான கதைகளைச் சொல்லி தூங்க வைக்க வேண்டும்.
படுக்கையறை விளக்குகளை அணைப்பதற்கு பதிலாக இரவு விளக்குகளை ஆன் செய்து நட்சத்திரங்கள் பற்றிய கதைகளைச் சொல்வது குழந்தைகளின் தூக்கத்திற்கு உதவிகரமாக இருக்கும்.