
செல்லப்பிராணிகளை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. செல்லப்பிராணிகள் காட்டும் பாசத்திற்காகவே அவற்றை விரும்புபவர்கள் உண்டு. சிலர் அவற்றை காவலுக்காகவும், இன்னும் சிலர் பாசத்திற்காகவும் வளர்ப்பார்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பது நமக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிறைய பலன்களை அளிக்கிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. உற்சாகம் தரும்
நம்முடைய நாள் மிகவும் மோசமாக இருந்தாலும் நாம் வீட்டிற்குள் நுழைந்ததும் வாலாட்டிக் கொண்டு வரும் செல்லப்பிராணியை பார்க்கும் போது நம்முடைய மனநிலை உற்சாகமாக மாறிவிடும். செல்லப்பிராணிகளை கொஞ்சுவது, விளையாடுவது நம்முடைய மகிழ்ச்சி ஹார்மோனை அதிகரித்து மனதை லேசாக வைக்க உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
2. தனிமையை போக்குகிறது
தனியாக இருப்பவர்கள் தங்கள் தனிமையை போக்க வேண்டும் என்றால் செல்லப்பிராணிகளை வளர்ப்பது நல்ல சாய்ஸ் ஆகும். அது காட்டும் அன்பும், துறுதுறுப்பாக இருப்பதும் தனிமையை மறக்க வைத்து சந்தோஷத்தை கொடுக்கும். மேலும் செல்லப்பிராணிகளை பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு வாக்கிங் அழைத்து செல்வதால் உங்களுக்கு அதன் மூலமாக நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
3. குழந்தை நலம்
செல்லப்பிராணிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, குழந்தைகளை உற்சாகமாக மாற்ற அவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்க செல்லப்பிராணிகளை பரிசாக அளிக்கலாம்.
4. சுறுசுறுப்பாக இருத்தல்
நமக்கு வாக்கிங் போவதற்கு சில சமயங்களில் சோம்பேறித்தனம் ஏற்படும். ஆனால், செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது அதை வாக்கிங் கூட்டி செல்ல வேண்டும் என்ற கட்டாயத்திலேயே கண்டிப்பாக வாக்கிங் செல்ல வேண்டிவரும். இதனால் நம் உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாக இருக்கும்.
5. மனஅமைதி
அளவில்லாத அன்பைக் கொடுக்கும் செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது மனம் லேசாகும். நம் மீது அளவுக்கடந்த அன்பைக் காட்ட ஒரு உயிர் இருக்கிறது என்பதை நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும் என்பதில் ஐயமில்லை.
இருப்பினும் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் நமக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றது. செல்லப்பிராணிகளால் ஏற்படும் நோய் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் நோய்க்கான தடுப்பூசியை அதற்கு கால்நடை மருத்துவர் மூலமாக அளித்து ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.