வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பவர்களின் முதல் தேர்வு அமெரிக்கா. ஆனால், மற்ற நாடுகளும் இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்குகின்றன. அத்தகைய நிரந்தர குடியுரிமையை இந்தியர்களுக்கு விரைவில் வழங்கும் 5 நாடுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பிரான்ஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சில் ஐந்தாண்டுகள் வாழ்ந்த பிறகு மாணவர்கள், ‘தற்காலிக குடியுரிமை அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதுகலை படித்திருந்தால் அல்லது சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்க விரும்பினால் மட்டுமே இந்த அனுமதி கிடைக்கும். அனுமதி பெற்ற பிறகு, அந்த நாட்டில் ஐந்து வருடங்கள் செலவிட வேண்டும். பின்னர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
2. அயர்லாந்து: அயர்லாந்தின் நிரந்தர குடியுரிமைக்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. மாணவர் விசாவில் வந்து படிக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. பிறகு பட்டதாரி விசா பெற்று ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை வேலை செய்ய வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை. இந்த விசா மூலம் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் முழு நேர வேலையைச் செய்ய முடியும். பட்டதாரி விசாவில் இருக்கும்போது, நீங்கள் ஒரு வேலைக்கு நீண்ட காலத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனை. இதற்குப் பிறகு நிரந்தரக் குடியுரிமைக்கு தகுதி பெறுவீர்கள்.
3. நார்வே: நார்வேயில் நிரந்தர குடியுரிமை பெற குடியிருப்பு அனுமதி குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்குப் பெற்றிருக்க வேண்டும். படிப்பின்போது செலவழித்த நேரம் இதில் கணக்கிடப்படாது. நிரந்தரக் குடியுரிமைக்கு, நீங்கள் ஒரு நார்வே பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருப்பதோடு, நார்வே மொழியும் தெரிந்திருக்க வேண்டும். உங்களை நிதி ரீதியாக ஆதரிக்க போதுமான பணம் உங்களிடம் இருப்பதோடு, குற்றவியல் பதிவு எதுவும் இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
4. நெதர்லாந்து: நெதர்லாந்தில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க, வெளிநாட்டு மாணவர்கள் படிக்கும் நேரம் உட்பட குறைந்தது ஐந்து வருடங்கள் அந்நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும். சிலர் ஐந்தாண்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக படிப்பை முடித்த உடனேயே ஓரியண்டேஷன் ஆண்டிற்கான குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் மேலும் படிக்க நேரம் கிடைக்கும். ஐந்தாண்டு நிபந்தனையை முடித்தவுடன், நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
5. ஜெர்மனி: ஜெர்மனியில் உங்கள் படிப்பை முடித்த உடனே நிரந்தர குடியுரிமை கிடைத்து விடும். ஆனால், இதற்காக, இரண்டு வருட வேலைக்கான குடியிருப்பு அனுமதி பெற வேலை தேடுவதோடு, ஜெர்மன் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். மற்ற ஐரோப்பிய நாடுகளை விட ஜெர்மனியில் நிரந்தர குடியுரிமை பெறுவது எளிது.
தாய்நாடு அன்னையை போன்றது. இருப்பினும் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மேற்கூறிய ஐந்து நாடுகளும் நிரந்தர குடியுரிமையை இந்தியர்களுக்கு விரைவில் வழங்குகின்றன.