
வயதாக வயதாக நமக்கு நிறைய உடல் ரீதியாக பல பிரச்னைகள் ஏற்படும். எல்லோருக்கும் இது தெரியும். வயதானால் நம் மனமும் உடலும் நாம் கூறுவதைக் கேட்காது. சில நேரங்களில் சுறுசுறுப்பாக இருப்போம். இன்னும் சில சமயங்களில் உறங்கிக்கொண்டே இருக்கத் தோன்றும். சாப்பிடவும் தோன்றாது. சிடுசிடுவென அடுத்தவர்களைக் கடிந்து கொள்வோம். வயதான காலத்தில் ஞாபக மறதி ஒரு பெரிய பிரச்னை. ஒரு விஷயத்தை பல முறை எடுத்துரைத்தால் கூட புரிந்துகொள்ளத் தடுமாறுவோம்.
நமக்கு வயதாகும்போது, மூளையானது தகவல்களைச் செயலாக்குவதில் இயல்பாகவே மெதுவாகச் செயல்படுகிறது. இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிப்பது, கார்டிசோல் அளவு அதிகரிப்பது, முடிவெடுப்பதில் தடுமாற்றம் மற்றும் குறைந்த நினைவாற்றல் என பலவிதமான பிரச்னைகளுக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்த மாற்றங்களை முதலிலேயே கண்டறிந்து அதை சரி செய்து கொள்ளலாம். ஆகவே, நாம் அனைவருக்குமே வயதாகும்போது மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஆரோக்கியமான தினசரி பழக்கங்களை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. நினைவாற்றலை மேம்படுத்த உதவும் புத்தக வாசிப்பு: தினமும் குறைந்தபட்ச நேரத்திற்கு புத்தகங்களையோ அல்லது கட்டுரைகளையோ அல்லது நாவல்களையோ அல்லது செய்தித்தாளையோ படிக்கப் பழகிக்கொள்ளவும். இது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், கவனத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
2. தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்: தூக்கம் என்பது மூளையை சரிவர இயங்கச் செய்ய உதவும் சிறந்த முறையாகும். இது நினைவுகளை ஒருங்கிணைக்கிறது, நச்சுக்களை அழிக்கிறது மற்றும் கவனம் செலுத்துவதற்கும் முடிவெடுப்பதற்கும் ஏற்றவாறு நம்முடைய திறனைப் புதுப்பிக்கிறது. தினமும் ஒரே நேரத்திற்கு தூங்கி எழும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.
3. உடல் செயல்பாட்டை கடைபிடியுங்கள்: எப்போதும் ஏதாவது ஒரு செயலில் உங்களை பிசியாக வைத்துக்கொள்ளுங்கள். கடைக்குச் செல்வது, வாக்கிங் போவது, சின்னச் சின்ன வீட்டு வேலைகளை செய்வது என ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருங்கள். வழக்கமான உடல் செயல்பாடு மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து BDNFஐ அதிகரிக்கிறது. இதனால் கற்றல், நினைவாற்றல் மற்றும் மூளை நெகிழ்வுத்தன்மை மேம்படுத்தப்படும்.
4. உங்கள் மூளைக்குத் தேவையான சரியான உணவை எடுத்துக்கொள்ளவும்: மூளைக்கு உதவும் வால்நட்ஸ், பெர்ரி, டார்க் சாக்லேட், இலைக் கீரைகள் மற்றும் ஒமேகா 3 நிறைந்த விதைகள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீங்கள் சாப்பிடும் உணவானது உங்கள் சிந்தனை மற்றும் உணர்வை நேரடியாக பாதிக்கிறது.
5. எதையும் ஏற்றுக்கொள்ள முயற்சிக்கவும்: நாம் அனைவருமே நம் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் கற்பனை செய்திருக்கிறோம். ஆனால், எல்லோருக்கும் 100 சதவிகிதம் நினைத்தது போலவே இருக்காது. நம் சூழ்நிலைகளைப் பற்றி தினமும் சிந்திப்பதன் மூலம் நம்மை நாமே உணர்ச்சி ரீதியாக காயப்படுத்திக் கொள்வதாக அர்த்தமாகிறது. வாழ்க்கை நமக்குக் கொடுத்ததை ஏற்றுக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் மனதை நீங்கள்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். மனம் உங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்கள் மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.