டீ வடிகட்டியை சுத்தப்படுத்த 5 எளிய வழிகள்!

5 Easy Ways to Clean a Tea Filter!
5 Easy Ways to Clean a Tea Filter!
Published on

ம்மில் பலரது வீடுகளில் பலரும் விரும்பி அருந்தும் பானம் டீ என்றாகி விட்டது. சில காலத்திற்கு முன்பு வரை டீ தூளை கொதிக்கும் பாலில் சேர்த்து பொங்கி வந்ததும் இறக்கி தட்டு போட்டு மூடி விடுவோம். சிறிது நேரம் கழித்து அதை வடிகட்டி மூலம் ஃபில்டர் பண்ணி, சர்க்கரை சேர்த்து பிளைன் டீயாக அருந்தி வந்தோம். பின் இஞ்சி டீ, ஏலக்காய் டீ வந்தது. தற்போது அது மழைக் காலத்து காளான் போல துளசி டீ, செம்பருத்தி டீ, கெமோமைல் டீ, க்ரீன் டீ, ஊலாங் டீ, மசாலா டீ என பல வகைகளில் பெருகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன. கிச்சனில் உள்ள சமையலறை சாதனங்களில் டீ வடிகட்டி (Filter) குடும்பத் தலைவிகளின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானதொன்றாகி விட்டது. இந்த ஃபில்டரில் உள்ள துளைகள் அடிக்கடி டீ இலைத் துகள்களால் அடைபட்டு டீயை ஃபில்டர் பண்ணுவதில் சிரமம் உண்டாக்கும். டீ வடிகட்டியை சுத்தப்படுத்த உதவும் 5 எளிய வழிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. ஒரு பௌலில் பேக்கிங் சோடாவையும் வினிகரையும் சம பங்கு எடுத்துக்கொள்ளவும். அதில் அடைப்பும் கறையும் உள்ள வடிகட்டியை போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் வெளியில் எடுத்து மெல்லிய பிரஷ்ஷால் மெதுவாகத் தேய்த்து கழுவி விடவும். ஃபில்டர் புது வடிவம் பெற்று அடைப்பு ஏதுமின்றி பள பளக்கும்.

2. வடிகட்டியை கையில் பிடித்துக்கொண்டு அதன் மீது கொதிக்கும் நீரை ஊற்றவும். பின் ஒரு பிரஷ்ஷால் மெல்ல, துவாரங்களில் ஒட்டியிருக்கும் இலைகளை நீக்கவும். நல்ல பலன் தரும் முறை இது.

3. ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதன் ஒரு பகுதியை வடிகட்டியின் முழு பாகத்தின் மீதும் நன்கு தேய்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின் தண்ணீரில் நன்கு கழுவி விட, மந்திரம் போட்டது போல் ஃபில்டர் புது வடிவம் பெற்று மின்னும்.

இதையும் படியுங்கள்:
‘வன ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் விளாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!
5 Easy Ways to Clean a Tea Filter!

4. பாத்திரம் தேய்க்க உபயோகிக்கும் சோப்பை கொஞ்சம் எடுத்து ஒரு பௌலில் போடவும். பின் அதன் மீது வெது வெதுப்பான நீரை, வடிகட்டி முழுகும் அளவுக்கு ஊற்றி கரைத்துக் கொள்ளவும். அந்த கரைசலில் வடிகட்டியை சிறிது நேரம் ஊறப்போடவும். பின் வெளியில் எடுத்து பழைய டூத் பிரஷ்ஷால் மெதுவாகத் தேய்த்துக் கழுவி விடவும். இப்போது வடிகட்டியின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்கு மற்றும் அடைப்புகள் அனைத்தும் நீங்கி ஃபில்டர் புதிது போன்ற தோற்றம் பெறும்.

5. ஒரு பௌலில் டெஞ்சர் டேப்லெட் (Denture Tablet) ஒன்றைப் போட்டு அதன் மீது வெது வெதுப்பான நீரை ஊற்றவும். அது கரைந்ததும் அந்த கரைசலின் உள்ளே வடிகட்டியைப் போட்டு பதினைந்து நிமிடம் ஊறவிடவும். இந்த மாத்திரை ஃபில்டரில் ஒட்டியிருக்கும் அனைத்து கறைகளையும் அடைப்புகளையும் நீக்கிவிடும். பின் ஃபில்டரை தண்ணீரில் கழுவி துடைத்து விட வடிகட்டி மீண்டும் உபயோகிக்க தயாராகி விடும்.

மேலே கூறிய முறைகளைப் பின்பற்றி உங்கள் டீ வடிகட்டியை சுத்தப்படுத்தி சுலபமாக டீ தயாரித்து அருந்துங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com