‘வன ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் விளாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

Health benefits of vilam fruit
Health benefits of vilam fruit
Published on

விளாம் பழம் ‘வுட் ஆப்பிள்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதனுடைய விஞ்ஞானப் பெயர் ‘லிமோனியா அசிடிசிமா.’ இது இந்திய துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் விளையும் வெப்ப மண்டலப் பழம் ஆகும். மேலே கடினமான ஓடுடன் கூடிய இந்தப் பழத்தின் உள்ளே இருக்கும் சுவையான சதைப்பற்றுள்ள பகுதியுடன் நாட்டுச் சர்க்கரையை கலந்து உண்டால் மிகவும் ருசியாக இருக்கும். இதனுடைய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஊட்டச்சத்துக்கள்: விளாம்பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. மேலும், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களும் நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குப் பங்களிக்கின்றன.

ஆக்சிஜனேற்ற பண்புகள்: இந்தப் பழத்தில் உள்ள பல்வேறு ஆக்சிஜனேற்ற பண்புகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

செரிமான ஆரோக்கியம்: இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. மேலும், இது ஆரோக்கியமான உடல் நுண்ணுயிரியையும் ஊக்குவிக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம்: பாரம்பரிய மருத்துவம் கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு விளாம்பழத்தை இயற்கையான தீர்வாகப் பயன்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்று பாரம்பரிய மருத்துவம் சொல்கிறது.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: சில ஆய்வுகள் விளாம்பழம் இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்று கூறுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக இந்தப் பழத்தை உண்ணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி: இதில் உள்ள அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலில் நோய்த் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்க்கிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காரணமாக உடலில் காயம் ஏற்பட்டால் அதை விரைவில் குணமாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்கிறது பாரம்பரிய மருத்துவம்.

சரும ஆரோக்கியம்: விளாம்பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன மற்றும் முகப்பரு போன்ற சரும பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன.

பசி உணர்வைத் தூண்டும்: சில குழந்தைகள் அஜீரணக் கோளாறு காரணமாக சரியான உணவு உண்ணாமல் இருப்பார்கள். அவர்களுக்கு விளாம்பழம் கொடுத்து வந்தால் அஜீரணக் குறைபாட்டை நீக்கி நன்றாக பசி எடுக்க வைக்கும்.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரை பயன்படுத்துவது ஏன் அவசியம் தெரியுமா?
Health benefits of vilam fruit

பித்தம் தணிக்கும்: பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு தலைசுற்றல், வாந்தி, தெளிவான கண் பார்வை இன்மை, தலைவலி போன்ற பிரச்னைகள் இருக்கும், அதிகமாக வியர்ப்பது, கிறுகிறுப்பு போன்ற உணர்வுகள் இருக்கும். இவர்கள் விளாம்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இந்த பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். பித்தத்தை நன்றாக தணிக்கும்.

எலும்புகள் பலமடையும்: பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் எலும்புகள் பலவீனமடைந்து மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் போன்றவை ஏற்படும். அவர்கள் விளாம்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். மேலும், விளாம்பழத்திற்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. நினைவாற்றலை அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொல்லைகளை நீக்கும்.

இதை பச்சையாக உண்ணலாம். பானங்கள், சட்னிகள், ஜாம்கள் மற்றும் இனிப்பு வகைகளாக செய்து பயன்படுத்தலாம். மேலும், இதில் தண்ணீர் மற்றும் வெல்லம் கலந்து புத்துணர்ச்சியூட்டும் பானமாகத் தயாரிக்கலாம். கோடை காலத்தில் இது மிகச் சிறந்த பானமாக விளங்கும். சூட்டை குறைக்கும்.

இத்தனை சத்துக்கள் நிறைந்த விளாம் பழத்தைதை வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com