இந்தியாவில் கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசம் என்றாலும் அவரவர் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக தாம் சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை பெற்றோர்கள் கல்விக்காக செலவிடுகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 பள்ளிகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்தப் பள்ளிகள் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதால் பெரும்பாலும் உயரடுக்கு குடும்பங்களைச் சேர்ந்த குடும்ப மாணவர்கள் மட்டுமே இந்தப் பள்ளிகளில் படிக்கின்றனர். சில தனியார் பள்ளிகளின் கட்டணத்தைக் கேட்டால் சாமானியர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு உள்ளது.
1. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற குவாலியர் கோட்டைக்குள் அமைந்துள்ள சிந்தியா பள்ளி அனைத்து ஆண்களுக்கான போர்டிங் பள்ளியாக 1897ல் அரச குடும்பங்களின் குழந்தைகளின் கல்விக்காக நிறுவப்பட்டது. இன்று இந்தப் பள்ளி நாட்டின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகவும் ஆண்டுக்கு 13.5 லட்ச ரூபாய் பள்ளிக் கட்டணமாக வாங்கும் பள்ளிகளில் முதலிடத்தில் உள்ளது.
2. உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள டூன் பள்ளி மற்றொரு புகழ் பெற்ற ஆண்கள் மட்டும் படிக்கும் போர்டிங் பள்ளி. இந்தப் பள்ளி 1935ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அதன் கடுமையான கல்வி மற்றும் முழுமையான கல்விக்காகவே மிகவும் பிரபலமானது. இங்கு ஆண்டுக்குக் கல்விக் கட்டணம் 10.25 லட்ச ரூபாய் ஆகும். கூடுதலாக 25,000 ரூபாய் செலவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3. ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரி 1875ல் நிறுவப்பட்டது. இந்தியாவின் பழைமையான மற்றும் மிகவும் மதிப்பு மிக்க சிறுவர்களுக்கான உறைவிட பள்ளிகளில் ஒன்றாக இது உள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) ஆண்டு கட்டணம் 13 லட்ச ரூபாயும், இந்திய குடிமக்களுக்கு ஆண்டு கட்டணம் 6.5 லட்ச ரூபாயும் ஆகும். இது மிகவும் பிரத்யேக கல்வி நிறுவனமாக உள்ளது.
4. மும்பையின் ஜூஹூவில் அமைந்துள்ள எகோல் மொண்டியல் வேர்ல்ட் ஸ்கூல் உலகளாவிய பாடத்திட்டத்தை வழங்கும் ஒரு சர்வதேச பள்ளியாக 2004ல் நிறுவப்பட்டது. இது பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணமாக 9.9 லட்சம் ரூபாய் முதல் மூத்த வகுப்புகளுக்கு 10.9 லட்சம் ரூபாய் வரை வசூரிக்கிறது. இது நாட்டின் மிகவும் விலையுயர்ந்த பள்ளிகளில் ஒன்றாக விளங்குகிறது.
5. 1937ல் நிறுவப்பட்ட வெல்ஹாம் ஆண்கள் பள்ளி டெஹ்ராடூனில் உள்ள மற்றொரு முக்கியமான உறைவிடப் பள்ளியாகும். இது அதன் பாரம்பரியம் மற்றும் சிறப்பிற்கும் பெயர் பெற்றது. இப்பள்ளியின் ஆண்டு கல்விக் கட்டணம் 5.7 லட்சம் ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக நம்மூரில், ‘படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும்’ என்ற கூற்று அதிகமாக நாம் காதில் விழுந்து இருந்தாலும், அதிகக் கல்விக் கட்டணம் வாங்கும் கல்விக்கூடங்களை பற்றி தெரிந்து கொள்வதில் தவறேதும் இல்லையே.