
குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகவும் முக்கியமானது, ஏனெனில், அதுவே அவர்களின் சிந்தனை, நினைவாற்றல், கற்றல் திறன், நடத்தை ஆகிய அனைத்திற்கும் அடிப்படையாகும். 5 வயதிற்கு முன்பே மூளை வளர்ச்சிக்குத் தேவையானவற்றில் 90 சதவீதத்தை அடைந்து விடும். மூளையின் அளவிலும், திறமையிலும் வளர்ச்சி பெற்று கொள்கிறது. முக்கியமான 5 காரணிகள் இந்த வளர்ச்சியை தடுக்கக் கூடும். அவை குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. அதிக திரை நேரம்: குழந்தைகளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கற்றுக்கொடுப்பதும், மேலும் அதிகமாகப் பேசவும் வேண்டும். நாம் பார்த்துப் பார்த்து சொல்லிக் கொடுக்கும் நல்ல பழக்கங்களை தொலைக்காட்சியில் வருகிற தொடர்களும், திரைப்படங்களும் திருடி விடும். கற்றலில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும். நாம் குழந்தைகளிடம், ‘கோபப்படாதே, பாசமா இரு’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், திரைப்படத்தில் குடிக்கிற ஒரு கதாநாயகன், பெற்றோரை கேவலமாகப் பேசும் ஒரு கதாநாயகன், அடிதடி காட்சிகள் போன்றவற்றில் ஈடுபடும் ஒரு கதாநாயகனை ரசித்து பார்க்கிறோம். அதனால் குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கிற பண்புகளும், திரையில் குழந்தைகள் பார்க்கிற பண்புகளும் முரண்பாடாக இருப்பதால் குழந்தைகளுக்கு அது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்களோடு நாம் அதிகமாகப் பேசி, வெளியில் கூட்டிச் சென்று இடங்களைக் காண்பித்து கவனித்தால் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சி அடையும். மொபைல், டிவி, டேப்லெட் போன்ற சாதனங்களை நீண்ட நேரம் பார்க்கும் பழக்கம் குழந்தைகளின் மூளை நரம்பு செயற்பாடுகளை மந்தமாக்குகிறது.
2. குறைவான தூக்க நேரம்: மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலை வலுப்படுத்துவதற்கும் தூக்கம் மிகவும் அவசியம். 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு 13 மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக வேண்டும். 3 முதல் 5 வயது வரை 11 மணி நேரம் தூக்கம் வேண்டும். அதுபோல 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் கண்டிப்பாக 9 மணி நேரம் தூங்க வேண்டும். இந்தத் தூக்கம் எதற்காக என்றால் குழந்தைகள் கற்றுக்கொள்வதைச் நிரந்தரமாக மூளையில் கொண்டு சேர்ப்பதற்கும், நாள்தோறும் கற்றதை மூளை நரம்புகள் வலுப்படுத்தவும், குழந்தையின் மனமும், உணர்வும் சமாதானம் அடையவும், ஓய்வு எடுப்பதற்கும், மறுநாள் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கும், நல்ல ஹார்மோன்கள் சுரக்கவும் தூக்கம் மிகவும் முக்கியம்.
3. குறைவான உடல் இயக்கம்: குழந்தைகளை நிறைய நேரம் விளையாட விட வேண்டும். மூளை வளர்ச்சிக்கு அதிகமாக, முக்கியமாக உள்ள காரணியாக இருப்பது வெளியில் போய் உடல் அசைந்து விளையாட விடுவது. நாள்தோறும் உடல் இயக்கம் குறைவாக இருந்தால், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் மூளையின் செயற்பாடு மந்தமாகி கவனக்குறைவு மற்றும் சோர்வு அதிகரிக்கிறது. உடற்பயிற்சி குழந்தைகளில் மன உற்சாகத்தையும் சிந்தனை சுறுசுறுப்பையும் மேம்படுத்துகிறது.
4. அதிகமான எதிர்மறை உணர்வுகள்: குழந்தைகள் கோபமாக உணரும்போது, பயப்படும்போது அவர்களின் பக்கத்தில் உட்கார்ந்து அவர்களின் மனதில் இருக்கும் எதிர்மறையான உணர்வுகளை மாற்றி நலமான உணர்வுகளால் நிரப்ப வேண்டும். பயம், கோபம், கவலை, துக்கம் போன்ற எதிர்மறை உணர்வுகள் நீண்ட காலமாக நிலைத்தால் மூளையின் ஹார்மோன் சமநிலை குலைகிறது.
5. சீரற்ற வாழ்வு முறை: சிறு வயதிலேயே குழந்தைகள் எப்போது தூங்க வேண்டும், எப்போது எழ வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு நேரம் விளையாடணும் என்பதை நாம் கற்றுக் கொடுத்தாலே குழந்தைகள் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கையை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்.
நேரம் தவறிய தூக்கம், உணவு மற்றும் மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுதல் மூளைக்கு ஓய்வளிக்காது. இதனால் மூளையின் சீரான வளர்ச்சி தடைபட்டு, மனநிலை மாறுபாடு மற்றும் கவனச்சிதறல் ஏற்படலாம்.