

"பையன் நல்லா படிக்கணும், பெரிய வேலைக்குப் போகணும், நிறைய சம்பாதிக்கணும்." - இதுதான் 90% பெற்றோர்களின் கனவு. இதற்காகப் பள்ளிக்கூடம், டியூஷன் என்று செலவு செய்கிறோம். ஆனால், சம்பாதிக்கும் பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறோமா என்றால், அது சந்தேகமே.
இன்னும் சொல்லப்போனால், நமக்குத் தெரிந்த சில பழைய, தவறான நம்பிக்கைகளைக் குழந்தைகளின் மனதில் விதைத்து விடுகிறோம். "பணம் சம்பாதிக்கிறது கஷ்டம்," "பணம் இருந்தா கெட்டுப் போயிடுவாங்க" என்று நாம் சொல்லும் எதிர்மறையான வார்த்தைகள், அவர்களின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியையே தடுத்துவிடும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாத 5 தவறான நிதிப் பாடங்கள் என்னென்ன, என்று பார்ப்போம்.
1. "பணத்தைப் பற்றிப் பேசாதே!" பல வீடுகளில் பணத்தைப் பற்றிப் பேசுவது ஏதோ தகாத வார்த்தையைப் பேசுவது போலப் பார்க்கப்படுகிறது. "சின்னப் பசங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம்" என்று ஒதுக்கி வைப்பார்கள். இது மிகப்பெரிய தவறு.
இப்படிச் சொல்வதால், பணம் என்பது ஏதோ ரகசியமான, சிக்கலான விஷயம் என்ற பயம் குழந்தைகளுக்கு வந்துவிடும். அதற்குப் பதிலாக, வரவு செலவு கணக்குகளை அவர்களுக்குப் புரியும்படி விளக்குவது, பணத்தின் அருமையையும், அதை எப்படிக் கையாள்வது என்பதையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.
2. "நம்மால் இதை வாங்க முடியாது!" கடைக்குச் செல்லும்போது குழந்தை எதையாவது கேட்டால், உடனே "நம்மகிட்ட காசு இல்ல," "நம்மால் வாங்க முடியாது" என்று சொல்லிப் பழக்காதீர்கள். இது குழந்தைகளிடம் ஒரு விதமான பற்றாக்குறை மனப்பான்மையை உருவாக்கிவிடும்.
"நாம ஏழை," "நமக்கு இது கிடைக்காது" என்ற தாழ்வு மனப்பான்மை வளரும். அதற்குப் பதிலாக, "இப்போதைக்கு இது நமக்கு அவசியமில்லை," அல்லது "இதற்குப் பதில் வேறு ஒரு முக்கியத் தேவை இருக்கிறது" என்று முன்னுரிமை அளிப்பதைக் கற்றுக்கொடுங்கள்.
3. "பணம் மரத்தில் காய்க்கவில்லை" குழந்தைகள் பணத்தைக் கேட்டால், பெற்றோர்கள் அடிக்கடி பயன்படுத்தும் டயலாக் இது. இது பணத்தைச் சம்பாதிப்பது என்பது மிகக்கடினமான, துன்பமான விஷயம் என்ற எண்ணத்தை விதைத்துவிடும். கடினமாக உழைத்தால் தான் பணம் வரும் என்று சொல்வது சரிதான்.
ஆனால், புத்திசாலித்தனமாக உழைத்தால் பணத்தைப் பெருக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பணம் என்பது ஒரு கருவி, அது நம்மை ஆளக்கூடாது, நாம் தான் அதை ஆள வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும்.
4. வீட்டு வேலைக்குச் சம்பளம் "உன் அறையைச் சுத்தம் செய்தால் 10 ரூபாய் தருவேன்," "பாத்திரம் கழுவினால் 20 ரூபாய் தருவேன்" என்று வீட்டு வேலைகளுக்குப் பணம் கொடுப்பது ஆபத்தானது. வீட்டு வேலை என்பது குடும்பத்தின் ஒரு அங்கம், அது ஒரு கடமை. அதைச் செய்வதற்குக் கூலி கொடுப்பது, எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்கும் குணத்தை உருவாக்கிவிடும்.
அதற்குப் பதிலாக, அவர்களுக்கு என்று தனியாகக் கைச்செலவுக்குப் பணம் கொடுத்து, அதை எப்படிச் செலவு செய்வது என்று பழக்குங்கள்.
5. "சேமிப்பு மட்டுமே போதும்" "உண்டியல் வாங்கித் தர்றேன், காசைச் சேர்த்து வை" என்று மட்டும் சொல்வது போதாது. உண்டியலில் இருக்கும் பணம் வளராது; பணவீக்கத்தால் அதன் மதிப்பு குறையும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வெறும் சேமிப்பை விட, 'முதலீடு' எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பணம் எப்படிப் பணத்தை உருவாக்கும் என்பதைச் சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம்.
குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு வளர்வதை விட, நாம் செய்வதைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நீங்கள் பணத்தைக் கண்டு பயப்படுபவராகவோ அல்லது திட்டமிடாமல் செலவு செய்பவராகவோ இருந்தால், குழந்தைகளும் அதையே பின்பற்றுவார்கள். எனவே, பழைய பஞ்சாங்கங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காமல், இன்றைய காலத்திற்கு ஏற்ற நிதி அறிவை அவர்களுக்குக் கொடுப்போம். அதுவே அவர்களுக்கு நாம் சேர்க்கும் மிகப்பெரிய சொத்து.