ஒவ்வொருவருடைய வாழ்விலும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிக்கப்படுகிறது . இதனால் ஒரு விதமான பதற்றமும், மன அழுத்தமும் ஏற்பட்டு ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எளிமையான மற்றும் கவனமான வாழ்க்கை முறையை கொண்டதுதான் ஜப்பானிய கலாச்சாரம். அந்த வகையில் மன அழுத்தத்தை குறைக்கும் ஜப்பானிய வழிமுறைகள் ஐந்தினை இப்பதிவில் காண்போம்.
1. வாபி-சபி: குறைபாடுகளிலும் அழகைக் காணுங்கள்.
இன்றைய சூழலில் ஒரு விஷயத்தில் எல்லோரும் முழுமை பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வாறு நடக்கவில்லை என்றால் ஒரு விதமான மன அழுத்தம் , பதட்டம் மற்றும் விரக்திக்கு உள்ளாகிறார்கள். வாபி-சபி என்ற ஜப்பானிய முறை குறைபாடுகளிலும் அழகை காண உதவுகிறது. எப்போதும் எல்லா விஷயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்றில்லாமல் சில நேரங்களில் குறைபாடுகள் ஏற்படுவது இயல்புதான் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது.
2. கன்சோ: எளிமையான வாழ்க்கை இடங்கள்
தேவையற்ற பொருட்கள் இல்லாமல் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தால் மனது ஒருமுகப்படுவதோடு அமைதியை நிலை நாட்ட முடியும் என்பதுதான் கன்சோ. அடிக்கடி பயன்படுத்தாத பொருட்களை வீட்டில் வைத்திருப்பது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும் என்பதால் அமைதியான மன நிலையை பெற, நடுநிலையான வண்ணங்களையும் இயற்கையான பொருட்களையும் பயன்படுத்தலாம்.
3. ஷிகாட்டா கா நாய்: உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததை விட்டு விடுங்கள்
நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை ஏற்றுக் கொள்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படும். ஆகையால் எதன் மீது கவனம் செலுத்த வேண்டுமோ அதற்கு கவனத்தை செலுத்தி நம் கட்டுப்பாட்டில் இல்லாததை விட்டுவிட வேண்டும். இதை சொல்வதுதான் ஷிகாட்டா கா நாய். ஷிகாட்டா கா நாய் என்றால் 'ஒன்றும் செய்ய முடியாது' என்று அர்த்தம்.
4. ஓசூஜி: மனதை தெளிவுபடுத்த ஆழமான சுத்தம்
ஓசூஜி என்றால் ஜப்பானிய மொழியில் 'பெரிய சுத்தம்' என்று அர்த்தம். அதாவது ஒவ்வொரு சீசன் முடியும் போதும், குறிப்பாக வீடு ,வேலை செய்யும் இடம் மற்றும் மேஜை போன்றவற்றை ஆழமாக சுத்தம் செய்வதால் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைக்கும். ஆகவே மனதை தெளிவுபடுத்த குறிப்பிட்ட இடைவெளியில் நம்மைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
5. இகிகய்: உங்கள் நோக்கத்தையும் நிறைவேற்றத்தையும் கண்டறியுங்கள்
இகிகாய் என்பது வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தை கண்டுபிடிக்க உதவும் ஒரு ஜப்பானிய கருத்தாகும். முதலில் ஒவ்வொருவரும் அவர்களுடைய இலக்கான நோக்கத்தை கண்டு பிடித்து அதற்கேற்றபடி அதாவது எதில் திறமையாக இருக்கிறீர்கள் என்பதை சிந்தித்து அந்த வழியில் விருப்பமான வாழ்க்கை வாழ்ந்தால் மன அழுத்தம் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேற்கூறிய ஐந்து வழிகளை ஜப்பானியர்கள் கடைபிடித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதை நாமும் பின்பற்றி பார்க்கலாமே!.