பொதுவாக, மனிதர்களுக்கு உடலில் வியாதிகள் வருவதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மனப் பதற்றம்தான். ‘சரி, மனப்பதற்றம் இல்லாமல் எப்படித்தான் வாழ்க்கையை நடத்துவது?‘ என்றுதானே யோசிக்கிறீர்கள். மனதில் பதற்றமின்றி வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கான 5 ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. வழக்கமான உடற்பயிற்சி: மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை நம் நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான உடல்நலப் பிரச்னைகள் ஆகும். இந்த உணர்வுகளைக் குறைக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில், இது ஆரோக்கிய மனநிலையை நன்கு மேம்படுத்தவும் பதற்றத்தைப் போக்கவும் உதவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மன அழுத்த ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவும்.
2. புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: புகைப்பிடித்தல் என்பது உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நீண்ட காலமாக அறியப்படுகிறது. ஆனால், அது மன ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவு மிகவும் ஆபத்தானது. மன அழுத்த சூழ்நிலைகளின்போது, அதிலிருந்து வெளிவர மக்கள் புகைப்பிடிப்பதை ஒரு வழியாக தவறாகக் கையாண்டு வருகிறார்கள். ஆனால், இது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிப்பதன் மூலம் உங்கள் கவலைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. விரைவில் புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது. பதற்றத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழி.
3. அதிகப்படியான ஆல்கஹால் வேண்டாம்: பலர் மது அருந்துவதை விரும்புகிறார்கள். இதனால், அவர்கள் தங்களை அதிகக் கவலைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. முதலில், மது அருந்திய பிறகு நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். ஆனால், நீங்கள் தினமும் மது அருந்த ஆரம்பித்தவுடன் அது பதற்றத்தின் அளவை அதிகரித்து, ஒட்டுமொத்த பீதியை ஏற்படுத்தும். அதனால் மது அருந்துவதை நிறுத்துங்கள்.
4. வேண்டும் நல்ல இரவு தூக்கம்: தூக்கமின்மை ஒருவரின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. போதிய தூக்கமின்மை என்பது கவலை மற்றும் மனச்சோர்வை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை உடல் சோர்வை ஏற்படுத்துகிறது மற்றும் உணர்ச்சி சோர்வுக்கும் வழிவகுக்கிறது. இரவில் மேற்கொள்ளும் ஆழ்ந்த உறக்கம் என்பது பதற்றத்திற்கு சிறந்த இயற்கை தீர்வாகும். உங்கள் வாழ்க்கையில் 7 முதல் 9 மணி நேர தூக்கத்திற்கு அவசியம் முன்னுரிமை கொடுங்கள்.
5. தியானத்தைத் தொடங்குங்கள்: மைண்ட் ஃபுல்னெஸ் அடிப்படையிலான தியானம், பதற்றத்தை அமைதிப்படுத்த மிகவும் பயனுள்ள இயற்கை வழிகளில் ஒன்றாகும். இது உளவியல் நல்வாழ்வில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். கவனத்துடன் தியானம் செய்வது தற்போதைய தருணத்தில் தெளிவைக் கொண்டு வருகிறது. இதனால் எண்ணங்களின் விழிப்புணர்வை அதிகரிக்க முடியும். மன அழுத்த சூழ்நிலைகளுக்கு ஆக்கபூர்வமாக பதிலளிக்க ஒரு நபரை இது அனுமதிக்கிறது. தியானத்தின் முக்கியக் குறிக்கோள் அமைதியான உணர்வை அனுபவிப்பது மற்றும் அனைத்து வகையான எண்ணங்களையும் உணர்வுகளையும் பொறுத்துக்கொள்ளும் திறனை அதிகரிப்பதாகும். கவலை அல்லது மனச்சோர்வை அனுபவிக்கும் அபாயத்தைக் குறைக்கும். பதற்றத்திற்கான சிறந்த இயற்கை சிகிச்சை இதுவாகும்.
மேற்கண்ட ஆலோசனைகளை தொடர்ந்து ஒரு மாதம் கடைபிடித்து பாருங்கள். உங்கள் மனம் மற்றும் உடலில் ஏற்படும் நல்ல முன்னேற்றங்களை நீங்களே கண்கூடாகப் பார்ப்பீர்கள்.