
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்க முடியாமல் செல்லும் சுவாரசியம் நிறைந்ததுதான் நமது வாழ்க்கை. பணம், செல்வம், இல்வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களில் நல்ல மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கருட புராணம் கூறும் வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய 5 நபர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள்: எல்லோருக்கும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இருக்கும். ஆனால், சிலர் மட்டும் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்வார்கள். உழைப்பின் முக்கியத்துவத்தை அறியாத அவர்கள், தான் கெடுவது மட்டுமின்றி, மற்றவர்களையும் அதே வழியில் வாழ ஊக்குவிக்க முயற்சிப்பார்கள். அத்தகையவர்களை வாழ்க்கையில் தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால், வாழ்க்கையில் எதுவும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கூட உதவாது. மேலும், உழைப்பின் மூலம் அதிர்ஷ்டத்தை கூட மாற்ற முடியும்.
2. எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்: இன்பம், துன்பம் நிறைந்த வாழ்க்கையில் பாசிட்டிவாக நினைக்க வேண்டும் என்று மனதார சொல்லிப் பழகுங்கள். எதிர்மறை எண்ணம் தோன்றுவது தவறில்லை என்றாலும் ஒரு விஷயத்தில் தனக்கு நடந்தது மற்றவர்களுக்கும் அப்படியே நடக்கும் என்பதில்லை. தான் ஒரு விஷயத்தில் என்ன தவறு செய்தோமோ அதை சரியாக கணித்து மற்றவர்கள் அதை செய்யும்போது அதை சரியாகச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். மேலும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் மற்றவர்களின் வெற்றிக்குத் தடையாக இருப்பார்கள் என்பதால் அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது.
3. ஈகோ காட்டுபவர்கள்: மனித உணர்வுகளில் மோசமான தாக்கத்தை உண்டாக்கக்கூடிய ஈகோவை சிலர் சமயம் பார்த்து வெளிப்படுத்துவார்கள். மேலும், சிலர் எல்லாவற்றிலும் தங்கள் ஈகோவை காட்ட விரும்புவார்கள். மற்றவர்களை விட தங்களை சிறந்தவர்களாகக் காட்டும் ஆயுதமான ஈகோ காட்டுபவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது.
4. பயனற்ற அறிவுரை வழங்குபவர்கள்: நாம் ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாதபோது அல்லது ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளும் முன் மற்றவர்களிடம் கருத்து கேட்போம். இதில் சில பயனற்ற அறிவுரைகளை வழங்குவதை தங்கள் பழக்கமாகக் கொண்டுள்ளவர்களால் நேரம் வீணாவதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என்பதால் பயனற்ற அறிவுரை வழங்குபவர்களிடமிருந்து தள்ளியிருங்கள். ஏனென்றால், அவர்களால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாததோடு, மற்றவர்கள் ஒரு விஷயம் செய்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
5. சோம்பேறிகள்: சோம்பேறி வாழ்க்கை வாழ்பவர்களே தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்பாவார்கள். ஆனால், தன் குறைபாடுகளை பற்றி கவலை கொள்ளாமல் சோம்பேறி மனிதன் எப்போதும் தனது தோல்விகளுக்கு விதியையோ அல்லது வேறு யாரையோ குறை கூறுகிறான். அத்தகைய சோம்பேறிகளின் தொடர்பை துண்டித்து விடுங்கள்.
மேற்கூறிய 5 நபர்களும் கருட புராணத்தின்படி வாழ்க்கைக்கு உதவாதவர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து தள்ளியே இருப்பது மிகவும் நல்லது.