
பொதுவாக, அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில குறிப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* கோயில், தெப்பக்குளம், புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்றால் முதலில் காலை அலம்பக் கூடாது. அத்தல தீர்த்தத்தை சிறிது தலையில் தெளித்துக்கொண்டு பிறகுதான் கால் அலம்ப வேண்டும்.
* தூங்கும்போது ஆண்கள் இடது பக்கமாகவும், பெண்கள் வலது பக்கமாகவும் படுத்துத் தூங்க வேண்டும். ஏனென்றால், உண்ட சோறு நன்றாக செரிப்பதற்கு அதுதான் சரியான முறை.
* விருந்திற்குப் போனால் சாப்பிட்டு முடித்ததும் இலையை மேல்பக்கம் இருந்து கீழ்ப்பக்கமாக மூட வேண்டும். ‘நன்றாக இருந்தது. நன்றாக சாப்பிட்டேன்’ என்று இதற்கு அர்த்தம். மாறாக, கீழ்ப்பக்கம் இருந்து மேல் பக்கமாக மூடினால், சாப்பிட்ட சாப்பாட்டில் திருப்தி இல்லை என்று அர்த்தம். இது மூதாதையர் நமக்குக் கூறும் அறிவுரை.
* எலுமிச்சை பழம், நேந்திரம் பழம், பால் போன்ற மூன்றையும் சேர்த்து எந்த உணவும் தயாரித்து சாப்பிடக் கூடாது. பாலும் எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்துபோகும். நேந்திரம் பழமும் பாலும் சாப்பிட்டால் சளித்தொல்லை அதிகரிக்கும்.
* பாகற்காய், வெந்தயம், சுண்டைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றில் இருக்கும் கசப்புத் தன்மையைப் போக்க எந்தப் பொருளையும் அதனுடன் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால், அவற்றின் மூலம் உடலுக்குத் தேவையானது கசப்புதான். அந்தக் கசப்பை நீக்கிவிட்டு அவற்றைச் சாப்பிட்டு எந்தப் பலனும் இல்லை.
* முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக் கூடாது. இவை இரண்டிலும் புரோட்டின் மிக அதிகமாக இருப்பதால் ஜீரணமாக மிகவும் தாமதமாகும்.
* நகைக் கடை, ஜவுளிக் கடைகளில் அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் பர்ஸ், ஹேண்ட் பேக் போன்றவை அழகாக இருந்தாலும் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதால் எடுத்துச் செல்லத் தயக்கமாக இருக்கும். அதற்கு நெயில் பாலிஷ் ரிமுவரை பஞ்சில் நனைத்து தேய்த்தால் எழுத்துக்கள் மறைந்து விடும். பின்னர் எடுத்துச் செல்ல சங்கடம் இருக்காது.
* நம் வீடுகளில் விசேஷம் வைக்கும்பொழுது தாம்பூலப்பை கொடுப்போம். அந்தப் பையில் எழுத்துக்களை பையின் உள்ளுக்குள் எழுதுங்கள். அது உபயோகமாக இருக்கும். வெளியில் எடுத்துச் செல்லவும் விருப்பமானதாய் அமையும்.
* கண்களுக்கு கண்ணாடியை அடிக்கடி போட்டு கழற்றுவதால் அதன் பிரேம் சற்று விரிந்து போய்விடும். கண்ணாடியை மடக்கும் பாகத்தில் இருக்கும் ஸ்குருவை இறக்குவதன் மூலம் அதை சரி செய்து விடலாம். இதற்கு தையல் மெஷினுடன் கிடைக்கும் சிறிய ஸ்குரூவை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் அதற்கென்று ஒரு ஸ்க்ரூ டிரைவரை வாங்கி வைத்துக் கொண்டால் சுலபமாக டைட் செய்து விடலாம்.
* முருங்கை மரங்களை கொல்லைப்புறங்களில் நடுவதை விட, வாசல் புறங்களில் நடுவது நல்லது. நல்ல காய்ப்பும் கிடைக்கும். காரணம், சாலையில் போக்குவரத்தினால் உண்டாகும் அசைவே.
* ஆணி மற்றும் ஸ்குரூக்களை போட்டு வைக்கும் டப்பாவில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை விட்டால் எளிதில் துருப்பிடிக்காது.
* கடுகு எண்ணெயை புளித்த மோரில் கலந்து தலையின் முடிக் கால்களில் தேய்த்த பிறகு சீயக்காய் தூள் தேய்த்து அலச பொடுகு தொல்லை நீங்கும்.