ஒரு பெற்றோராக, குழந்தைகளிடம் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நமது வார்த்தைகள் குழந்தைகளின் உணர்ச்சி, சுயமரியாதையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் நமது குழந்தைகளை கேலி செய்வது இயல்பானது என்றாலும், தவறுதலாகக் கூட சில வாக்கியங்களை பயன்படுத்திவிடக் கூடாது. இது அவர்களை அதிகமாக புண்படுத்தி காயங்களை ஏற்படுத்தலாம்.
“நீ மிகவும் மோசமானவன்/மோசமானவள்”
உங்களது பிள்ளையை வெளிப்படையாக எதிர்மறை கருத்துக்களைக் கூறி திட்டாதீர்கள். அவர்களை சோம்பேறி, முட்டாள், மோசமானவர்கள் என அழைப்பது அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு அதே குணாதிசயத்துடன் மாறுவதற்கு வழிவகுக்கும். அதற்கு மாறாக அவர்களை ஆக்கபூர்வமாக விமர்சிப்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், எப்படி அதிலிருந்து தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் புரிந்துகொள்ள உதவுங்கள்.
“உன்னால் ஏன் பிறரைப் போல இருக்க முடியாது?”
உங்கள் குழந்தைகளை ஒருபோதும் உடன்பிறப்புகள் மற்றும் பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. ஒவ்வொருவருக்கும் சொந்த பலம் மற்றும் பலவீனங்கள் இருக்கும். எனவே உங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் தனித்துவத்தைக் கொண்டாடி அவர்களின் சொந்தத் திறன்களை வளர்க்க உதவுங்கள்.
“நீ எதையுமே சரியாக செய்ய மாட்டாய்”
உங்கள் குழந்தைகள் ஏதாவது தவறு செய்யும்போது அல்லது தோல்வி அடையும்போது அவர்களை மோசமாக விமர்சிக்காதீர்கள். இது போன்ற வார்த்தைகள் அவர்களின் நம்பிக்கையை சிதைத்து புதிய விஷயங்களை தைரியமாக முயற்சிப்பதிலிருந்து பின்வாங்க வைக்கும். எனவே, உங்கள் குழந்தை தோல்வியுற்றால் அவர்களால் அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்து ஊக்கம் கொடுக்கும் பெற்றோராக இருங்கள்.
“பொம்பள பிள்ளை மாதிரி அழாதே”
ஒருவேளை உங்கள் வீட்டில் ஆண் குழந்தை இருந்தால் அவர்கள் அழுதால் மோசமாக விமர்சிக்காதீர்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள். அவர்கள் அழும்போது நீங்கள் விமர்சித்தால் அவர்களது மனம் அதிகம் கவலைப்படலாம். எனவே பெற்றோர்கள் ஆண் குழந்தைகள் அவர்களது உணர்வை வெளிப்படுத்த இடம் கொடுக்க வேண்டும்.
“உங்க அப்பன/ஆத்தள மாதிரியே இருக்கியே”
உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் குடும்பத்தில் உள்ள நபர்களிடம் ஒப்பிட்டு பேசாதீர்கள். உங்கள் குடும்ப நபர்களை எதிர்மறையாக பிள்ளைகளிடம் சொல்வது உறவுகளுக்கு மத்தியில் விரிசலை ஏற்படுத்தலாம். அதற்கு மாறாக உங்கள் குழந்தைகளை வாழ்க்கையின் சவால்களை நேர்மறையான வழியில் எதிர்கொள்ள ஊக்கம் கொடுக்கவும்.