பேச்சுத்திறமை ஒருவருக்கு எல்லா நேரங்களிலும் சாதகமாக அமைந்து விடாது. பல நேரங்களில் பிரச்னையிலும் சிக்க வைக்கும். நன்றாகப் பேசத்தெரிந்தவர்கள் கண்டிப்பாக தங்கள் தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால், நாம் ஒருசில இடங்களில் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பதுதான் நல்லது. அப்படிப்பட்ட 5 இடங்கள் எவையெவை என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ஒருவர் புலம்பும்போது: நம்முடைய நண்பரோ அல்லது நமக்குத் தெரிந்தவரோ அவரது பிரச்னைகளை நம்மிடம் புலம்பித் தீர்க்கும்போது பொதுவாக நம்மிடம் தீர்வு கேட்டு வரமாட்டார்கள். மனதில் இருப்பதை ஒருவரிடம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் நம்மிடம் வந்து பேசுவார்கள். அப்போது குறுக்கே பேசாமல் தீர்வு கேட்டால் மட்டும் அவர்களுக்கு பதில் அளித்தால் போதுமானது.
2. அவமதிக்கும்போது: உங்களை யாராவது ஒருவர் பர்சனலாக அட்டாக் செய்கிறார் என்றால் அவருக்கு உங்கள் மீது அளவு கடந்த வன்மம் இருக்கும். அப்படி ஒருவர் உங்களை அவமதிக்கும்போதோ அல்லது வீணாக உங்களை சண்டைக்கு அழைத்தாலோ பார்வையால் கடந்து விட்டு பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும். அதற்கு மேல் பதில் அளிப்பது உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும் செயலாகும்.
3. ரகசியம் பேசும்போது: இருவருக்குள் இருக்கும் ரகசியத்தை மூன்றாம் நபருக்கு தெரியப்படுத்தக் கூடாது. ஒருவர் உங்களிடம் இந்த விஷயத்தை யாரிடமும் கூறக் கூடாது என்று ரகசியத்தை கூறினால், அதைக் காப்பாற்ற முடியாது என்று நீங்கள் நினைக்கும் போது அவரிடம், ‘இந்த விஷயத்தை என்னிடம் கூற வேண்டாம்’ என்று சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவித்து விடுவதே உத்தமம்.
4. சண்டையில்: யாராவது ஒருவர் உங்களை கோபப்பட்டு சண்டைக்கு இழுத்தால் நீங்கள் அந்த இடத்தில் அமைதியாக சென்று விடுவது சூழ்நிலையை கொஞ்சம் கூல் டவுன் ஆக்கச் செய்யும். கோபத்திலோ அல்லது வெறுப்பிலோ நீங்கள் வார்த்தையை விடாமல் இருப்பது பெரிய சண்டையை சிறிய சண்டையாக மாற்றி விடும்.
5. போதுமான விஷயம் தெரியாதபோது: முழு உண்மை தெரியாமல் நாம் பேசும்போதோ அல்லது ஏதேனும் தவறாகப் பேசி விட்டாலோ அல்லது யாருக்கேனும் தவறான அட்வைஸ் கொடுத்து விட்டாலோ உங்கள் மீது பிறர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பதால் ஒன்றும் தெரியாமல் பேசுவதற்கு, "எனக்கு அதைப்பற்றி போதுமான விவரம் தெரியாது" என்று கூறிவிட்டு அமைதியாக இருந்து விடுவது நம்மை நேர்மையாகவும் உண்மையாகவும் காண்பிக்கும்.
மேற்கூறிய ஐந்து இடங்களில் நாம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது எல்லா வகையிலும் உத்தமமான செயலாகும்.