குழந்தை வளர்ப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் மகத்தான ஒன்று. தன் மூலம் ஒரு சந்ததி உருவாகிறது என்பதில் மன நிறைவு இருந்தாலும் அந்த குழந்தைக்கு முழு ஆரோக்கியமான உணவுகள் தருவதில் துவங்கி, குழந்தை வளரும் சமயம் எப்படி நோய் நொடி இன்றி பாதுகாப்பது என்பது வரை பல சந்தேகங்கள் தாய்மார்களுக்கு உண்டு.
காலத்திற்கேற்ற உணவுகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற சந்தேகம் நிறைய உண்டு. இதோ குழந்தைகளின் உணவு குறித்த சில சந்தேகங்களுக்கான விடைகள் இங்கு...
1. தாய்ப்பால் மட்டுமே தரும் காலம்?
தாய்ப்பால் உலகிலேயே மிகச் சிறந்த உணவு என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் போதும். இதுவே பச்சிளம் குழந்தையை காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் கவசமாகிறது.
2. தண்ணீர், பிற உணவுகள் சேர்க்கலாமா?
தாய்ப்பாலிலேயே நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், தாய்ப்பால் தரும்வரை (முதல் 6 மாதங்களுக்கு) தண்ணீர் கூட அவசியமில்லை. 6 மாதத்திற்கு பிறகு குழந்தையின் பசிக்கு சத்துமாவுக்கஞ்சி, தயிர்சாதம் போன்ற இணை உணவுகளையும் 7ம் மாதத்திலிருந்து ஆப்பிள் கேரட் போன்றவைகளை வேகவைத்து மசித்தும் தரலாம். படிப்படியாக பருப்பு, இட்லி போன்றவற்றையும் தரலாம். தாய்ப்பாலுடன் இவைகளும் முறையாக சேரும்போது குழந்தைக்கு சரிவிகித உணவு கிடைக்கும்.
3. எந்த வயதில் பால் தரலாம்?
இரண்டு முதல் மூன்று வயது வரை கூட குழந்தைகளுக்கு பால் தவிர்த்து தாய்ப்பால் தருவது மிகவும் நல்லது. ஆனால் அதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் குறைந்தது ஒரு வயது வரையாவது குழந்தைக்கு தாய்ப்பால் தரவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு காலை மதியம் இரவு என சத்தான உணவு முறையை பழக்கப்படுத்தி உணவு நேரத்துக்கு இடைப்பட்ட வேளையில் தலா ஒரு டம்ளர் பாலை இரண்டு முறை தரலாம். மதிப்பு கூட்டப்பட்ட பாலின் மறு வடிவமான தயிரை தயிர் சாதமாகவோ வெறும் தயிராகவோ ஒரு சிறு கப் தரலாம்.
4. பவுடர் பால் தருவது நல்லதா?
நிச்சயமாக இல்லை. வேறு வழியே இன்றி வெளியூர் போகும் நேரங்களில் மட்டும் அன்று பயன்படுத்திய பால் பவுடர் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பாலை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தி பின்னர் குளிர்விக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் பால் பவுடரில் உள்ள பாக்டீரியாகள் அழிந்து விடுகின்றன. மேலும் இதில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமின்றி உப்பு சார்ந்த ஒரு சேர்மானங்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் ஒவ்வாமை அஜீரணம் போன்ற பல உபாதைகள் ஏற்படலாம். நீண்ட காலத்துக்கு கெடாமல் நினைத்ததும் சுடுநீரில் கலந்து பாலாக தர முடிகிறது என்றாலும் ஆரோக்கிய பாதிப்பும் உள்ளதால் கவனம் தேவை.
5. நாம் உண்ணும் உணவுகள் எப்போது தரலாம்?
ஒன்று முதல் இரண்டு வயதில் முளைகட்டிய தானியங்கள் மற்றும் பெரியவர்கள் உண்ணும் அனைத்து உணவுகளையும் மிகக் குறைவான அளவில் இருந்து படிப்படியாக அவர்கள் விரும்பும் வண்ணம் அதிகரிக்கலாம். குறிப்பாக ஐந்து வரை வயது உள்ள குழந்தைகளுக்கான உணவில் உப்பு, சர்க்கரை, புளி, காரம், மசாலா பொருட்கள் குறைவாக சேர்த்தும், துரித உணவுகள், எண்ணெயில் பொரித்தது போன்ற ஆரோக்கியக்கேடான உணவுப் பொருட்களை தவிர்க்கவும் வேண்டும். 6 வயதிலிருந்து குழந்தைக்கு ஏற்ற உணவுமுறை என்ன என்பதை உணர்ந்து விடுவதால் அதற்கேற்ப கடைபிடிக்கலாம்.