
‘வெற்றி‘ என்ற வார்த்தையைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் பணியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் அனைவருக்கும் இயற்கையாகவே இருக்கும் ஒன்று. அந்த வகையில் பணியில் வெற்றி பெற தேவையான சில ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. முழுமையாக கவனித்தல்: மேலதிகாரி கூறும் வேலை சம்பந்தமான வழிகாட்டுதலையும் உத்தரவுகளையும் முழுமையாக கவனிக்க வேண்டும். அவருடைய வார்த்தைகளுக்கு அப்பால் அவர் என்ன கூறுகிறார் என்பதை உணர முயற்சிப்பதோடு, அவரின் எண்ண ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் உங்கள் கவனிப்பின் கூர்மை இருக்க வேண்டும். மேலதிகாரியின் உத்தரவுகளை கேட்கும்போது மிகவும் விழிப்போடும் முழு மனதோடும் கவனித்து அவற்றை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
2. மீண்டும் உறுதி செய்து கொள்வது: உங்கள் மேல் அதிகாரி கூற வேண்டியவற்றை கூறி முடித்ததும் அவர் கூறியவற்றை நீங்கள் புரிந்து கொண்டீர்களா என்பதை உறுதி செய்ய அவர் கூறியவற்றின் முக்கிய அம்சங்களை அவரிடம் திரும்பக் கூறிய பிறகு பணியை செயலாக்குங்கள். ஏனெனில், நினைத்தது ஒன்று, கூறியது மற்றொன்றாகவும் அல்லது நீங்கள் கேட்டது ஒன்று, புரிந்து கொண்டது வேறொன்றாகவும் இருக்கலாம்.
3. குறிப்பு எடுத்துக்கொள்வது: ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி சிந்தித்து குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மேல் அதிகாரி கொடுத்துள்ள பணிகள் அவை எந்த அளவிற்கு முடிந்துள்ளன; அவற்றை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்கள், இடையூறுகள், கால அளவு ஆகியனவற்றை மறு ஆய்வு செய்து அதுகுறித்து அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுங்கள்.
4. செய்து முடியுங்கள்: உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை உடனடியாகவும் திறமையாகவும் செய்து முடிக்க வேண்டும். செய்து முடித்த பின்னர் அதை உங்கள் மேலதிகாரிக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவதால் எந்தப் பிரச்னையையும் உங்களால் முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மேலதிகாரி மனதில் ஏற்படுத்தும்.
5. பிரச்னையை தீர்ப்பவராக இருங்கள்: பிரச்னையை தீர்ப்பதற்காகத்தான் உங்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்களே தவிர. பிரச்னையை உருவாக்குவதற்கு அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இதனால் பிரச்னையை தீர்ப்பதில் முதல் தரமானவராகத் திகழுங்கள். அந்த வகையில் பிரச்னைகளைத் தீர்க்க அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகி பிரச்னைகளை தீர்ப்பதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்.
முன்னேற்றத்தின் கதவுகளை திறக்கின்ற சாவி உங்கள் உழைப்புதான் என்பதால், பணி செய்யும் இடத்தில் திறம்பட தங்களுடைய திறமையை நிரூபித்து உயர்ந்த நிலையை அடையுங்கள்.