
சில சமயம் யாரிடமாவது, எதையாவது எடுத்து வரச்சொல்லி, அது அவர்களுக்குப் புரியவில்லை என்றால் உடனே அவர்களை, ‘முட்டாள், புத்தி கெட்டவன், ட்யூப் லைட், சரியான மட சாம்பிராணி‘ என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆமாங்க, இந்த ‘மட சாம்பிராணி‘ என்றால் என்ன தெரியுமா? சரி முதலில் சாம்பிராணி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
சாம்பிராணி ஸ்டைராகேசியே குடும்பத்தைச் சேர்ந்த பல மரங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு பால்சமிக் பிசின் ஆகும். இந்த பிசின் உலர்த்தப்பட்டு, பொடி செய்யப்பட்டு சந்தைகளில், பொடியாகவோ அல்லது தொகுதிகளாகவோ விற்கப்படுகிறது.
இது ஆங்கிலத்தில், ‘பென்சாயின் ரெசின்‘ என்றும், இந்தியில் லோபன் என்றும், தமிழில் சாம்பிராணி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சாம்பிராணியை சிலர் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் ஏற்றி வைப்பார்கள். சிலர் குறிப்பிட்ட விசேஷமான பூஜை தினங்களில் ஏற்றுவார்கள். இந்த சாம்பிராணியிலிருந்து வரும் நறுமணமானது நமக்கு மன அமைதியையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. கொசுக்களை விரட்டவும் இதை ஏற்றலாம்.
மேலும், மழைக் காலத்தில் குழந்தைகளுக்கு தலைக்குக் குளிப்பாட்டிய பிறகு இந்த சாம்பிராணியை ஏற்றி புகையை தலைப்பகுதியில் வருமாறு காட்டினால் தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தவிர்க்கும். மேலும், ஐலதோஷமும் வராமல் இருக்கும். இந்தப் புகையை பிரசவித்த பெண்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் தலைக்கு குளித்த பின்பு காட்டினால் மிகவும் நல்லது. ஆனால், புகையை காண்பிக்கும்போது மூக்கில் புகை போகாதவாறு பின் மண்டையில் காண்பிக்க வேண்டும்.
சரி, சாம்பிராணியை பற்றித் தெரிந்து கொண்டோம். அது என்ன ‘மட சாம்பிராணி‘ என்று சில பேரை கூறுகிறார்கள் என்பதைப் பார்க்கலாமா?
மட சாம்பிராணி என்றால் மடம் + சாம்பிராணி என்று பொருள். மடங்களில் கூடம் போன்ற இடத்தில் ஒரு பெரிய கட்டிச் சாம்பிராணி இருக்கும். இதை வழக்கம் போல தழலில் இட்டு தூபத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை. அது இருந்த இடத்திலேயே இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைந்து நறுமணத்தைக் கொடுக்கும். மேலும், நாளடைவில் உருமாறி ஒழுங்கற்ற ஒரு தோற்றத்தை அடையும். இதுதான் மட சாம்பிராணி என அழைக்கப்படுகிறது. மடத்தில் கிருமிகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்காக இதை வைத்திருப்பார்கள்.
அதாவது, இந்த மட சாம்பிராணியானது கரைவதற்கு நிறைய நாளை எடுத்துக் கொள்ளும். அது தானாகவே மெது மெதுவாகத்தான் கரையும். இதைப் போலவே சில பேருக்கும் நாம் என்ன சொன்னாலும் அவர்கள் சில மணி நேரத்திற்கு பிறகோ அல்லது சில நாட்களுக்கு பிறகோதான், தானாகவே மெது மெதுவாகப் புரிந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் மட சாம்பிராணி என்று சொல்வது வழக்கம்.