
நாம் நம்மைப் பற்றிய ஒருசில விஷயங்களை வெளியில் சொல்லும்போது சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. மனிதர்களாகிய நாம் சில விஷயங்களை அதிகமாக அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது அது பொறாமை, வஞ்சம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு வழி வகுக்கிறது. உளவியல் ரீதியாக உங்களுடைய உணர்ச்சிகளை பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள நீங்கள் வெளியில் கூறக் கூடாத 5 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. எதிர்கால திட்டங்கள்: உங்களோடு தொடர்பில் இருக்கும் அனைவரும் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். மேலும், சில பேர் நீங்கள் எப்போது தோல்வியடைவீர்கள், அப்பொழுது கைத்தட்டி மகிழ்ச்சியாக சிரிக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். மேலும், இத்தகைய நபர்களிடம் உங்களுடைய எதிர்கால திட்டங்களைக் கூறும்போது அவர்கள் உங்களுடைய திட்டங்களைத் திருடிக்கொள்வதோடு, உங்களை குழப்பவும் நேரும் என்பதால் உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.
2. நிதி ரீதியான விஷயங்கள்: உங்களுடைய வருமானம், செலவு ஆகியவற்றை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள் உங்களுடன் பொய்யான உறவுகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும், உங்களுடைய வருமானம், செலவு இவற்றைத் தெரிந்து கொண்டால் அவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பொறாமைப்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்களுடைய நிதி சார்ந்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
3. தவறுகள்: தவறுகளும் தோல்விகளுமே உங்களுக்குப் பாடமாக அமைந்து, உங்களை முதிர்ந்த மனிதர்களாக மாற்றும் என்பதால் உங்களுடைய தவறுகளை மற்றவரிடம் பகிர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி உங்களுடைய தவறுகளைச் சொல்லும்போது உங்களது பலவீனத்தை மற்றவர்கள் தெரிந்து கொண்டு உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உண்டு என்பதால் இதுபோன்ற தவறுகளை மேலோட்டமாக கூறினாலே போதுமானது.
4. பிரச்னைகள்: உங்களுக்கும் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கும் இருக்கும் பிரச்னைகளை மூன்றாவது நபரிடம் கூறினால் பிரச்னை இன்னும் பெரிதாகி, உறவே கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதால் உங்கள் பார்ட்னர் உடனான பிரச்னையை அடுத்தவரிடம் கூறாமல் பேசி உங்களுக்குள்ளேயே சரி செய்து கொள்வது நல்லது.
5. பயங்கள்: உங்கள் ஆழ் மனதில் உள்ள பயங்கள் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகளை அடுத்தவரிடம் சொல்லக் கூடாது .ஏனெனில், இத்தகைய விஷயங்கள் பின்னாளில் உங்களுக்கு பிரச்னை கொடுக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நம்பிக்கைக்கு உரியவர்கள் தவிர, மற்றவர்களிடம் இதுபற்றி பேசக் கூடாது.
மேற்கூறிய 5 விஷயங்களையும் நீங்களே ஆழமாக சிந்தித்து பிரச்னைக்கு தீர்வு காண்பதே சரியானதாகும். மற்றவரிடம் பேசி மேலும் பிரச்னையை பெரிதாக வளர விடாதீர்கள்.