
ஒரு வீடு என்பது வெறுமனே உண்டு, உறங்கி வசிக்க மட்டுமல்ல, அனைத்து உணர்வுகளும் ஒருங்கிணைந்து உறவுகள் கூடி மகிழ்வுடன் வாழவும்தான். அவரவர் ரசனைக்கு ஏற்ப வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் விருப்பம். அதில் பேனலிங் எனப்படும் உட்புற சுவர் அலங்காரம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சுவர் பேனலிங் (Wall panelling) என்பது சுவர்களில் பேனல்களைப் பொருத்தி சுவர்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தந்து வீட்டின் உட்புறத்தை அலங்கரிக்கும் ஒரு நவீன கட்டடக்கலை வடிவமைப்பு முறையாகும். இந்த முறையில் பயன்படுத்த பலவிதமான பேனல் பொருட்கள் மற்றும் டிசைன்கள் உள்ளன. அவை உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்த உதவுகின்றன. நமது விருப்பம் மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப சுவர் பேனலிங் வகைகளைத் தேர்வு செய்யலாம். அதில் சில இங்கு.
மர பேனலிங் ஒரு அறைக்கு இயற்கை தோற்றம் மற்றும் பாதுகாப்பான வசதியைத் தரும். இதை ஓக், பைன் அல்லது வால்நட் போன்ற பல்வேறு வகையான மரங்களிலிருந்து விலைக்குத் தகுந்தவாறு வடிவமைத்துத் தருகின்றனர். இது சற்று அதிக பட்ஜெட் என்றாலும் மிடுக்கான தோற்றம் தரும்.
MDF (நடுத்தர அடர்த்தி ஃபைபர்போர்டு) பேனலிங் என்பது மர பேனலிங்கிற்கு செலவு குறைந்த மாற்றாகும். விரும்பிய வடிவமைப்பிற்கு பொருந்துமாறு இதற்கு வண்ணம் தீட்டலாம் அல்லது வெனீயர் செய்யலாம். வெனீயர் என்பது சுவர் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய அடுக்குப் பொருள். பொதுவாக, அழகியல் நோக்கங்களுக்கான இது, பெரும்பாலும் மரம், கல், செங்கல் அல்லது பிற பொருட்களால் ஆனது.
PVC (பாலிவினைல் குளோரைடு) பேனலிங் என்பது நீடித்திருக்கும் தன்மை மற்றும் குறைந்த பராமரிப்புக்கு சிறப்புப் பெறுகிறது. இது மரம் அல்லது பிற பொருட்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கின்றன.
மெட்டல் பேனல்களில் பயன்படுத்தப்படும் உலோகத்தின் பளபளப்பு மற்றும் கடினத்தன்மை ஆகியவை சுவர்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிப்பதால் தொழில் சார்ந்த தோற்றத்திற்கு ஏற்றது. மேலும், சுவரில் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்கும் 3D பேனல்கள் நவீன மற்றும் கலைநயமிக்க தோற்றத்தை அளிக்கின்றன. இந்திய பாரம்பரியத்தை விளக்கும் பேனல்களும் உண்டு.
இந்த சுவர் பேனலிங் தரும் நன்மைகளுள் முதல் இடத்தில் உள்ளது அழகியல். பேனல்கள் சுவர்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தையும், கவர்ச்சியையும் அளிப்பதால் வீட்டு உரிமையாளர் பெருமை கொள்ளலாம். சுவர்களை கீறல்கள் மற்றும் பிற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன. சில பேனல்கள் வெப்பம் மற்றும் ஒலி தடுப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் அமைதியான சூழலைப் பெறலாம்.
சுவர் பேனலிங் வடிவமைப்பில் அதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிபுணரைக் கலந்தாலோசித்து புதுமையான முறையில் செய்தால் அது அனைவரையும் கவரும். ஒரு சுவரில் கிடைமட்டமாக அல்லது செங்குத்தாக மர பேனல்களைப் பொருத்தி, அறைக்கு ஒரு இயற்கையான தோற்றத்தை அளிக்கலாம். நுழைவு வாயில்கள் அல்லது சாப்பாட்டு அறைகளில் 3D பேனல்களைப் பொருத்தி கண்கவர் அழகை உருவாக்கலாம். படுக்கையறைகளில் இந்திய பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய காமதேனு பேனல்களைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான, ரசனையான தோற்றத்தை உருவாக்கலாம். அறையில் ஒரு மைய புள்ளியை உருவாக்க பேனலிங் பயன்படுத்தி சுவர்களை வடிவமைக்கலாம்.
சுவர் பேனல்களை சுவர்களில் மட்டுமின்றி, கதவுகள், அலமாரிகள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டும் வீட்டில் புதுமைகள் வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக இந்த சுவர் பேனலிங்கை பயன்படுத்தலாம். அதேசமயம், நீண்ட காலம் உழைக்கக்கூடியவை மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் பேனல்கள் தேர்வு அவசியம் என்பதும் முக்கியமானது.