நம் வீட்டின் இதயப் பகுதியாகத் திகழ்வது சமையல் அறையே என்று சத்தம் போட்டுச் சொல்லலாம். ஏனெனில், நம் வாழ்க்கைக்கு ஆதாரமான உணவைத் தயாரிக்கும் இடம் அது. நம் வீட்டுப் பெண்கள் அதிகமான நேரத்தைச் செலவிடும் இடமும் சமையலறைதான்.
நம் வயிற்றுக்கு ஆரோக்கியம், சுவை, மணம் நிறைந்த உணவுகளைத் தருவதுடன், ஒரு திருப்தியுடன் கூடிய சுகானுபவம் தருவதும் இந்த இடம்தான். இத்தனை பெருமைகளைத் தாங்கி நிற்கும் சமையலறையானது எப்பவும் சுத்தமாக இருப்பது அவசியமல்லவா? ஆனால், பல நேரங்களில் அது எண்ணெய் பிசுபிசுப்பும் அழுக்கும் நிறைந்து பார்ப்பவர் மனதில் எதிர்மறையான அதிர்வலைகளை உண்டுபண்ணுவதாகவே உள்ளது. சமையலறை சுத்தத்திற்கு பின்பற்ற வேண்டிய 5 டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. தினசரி சமையலை முடித்தவுடன் அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தவும். மசாலா பொருள்கள் வைத்துள்ள ஜார்களையும் துடைத்து அவற்றை மீண்டும் அதனதன் இடத்தில் ஒழுங்குபடுத்தி வைக்கவும். இதனால் அங்கு பூச்சிகளும் கிருமிகளும் தங்குவதைத் தடுக்க முடியும்.
2. சமைக்கும்போது கிச்சன் சிம்னி அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவதால் அவை ஈரப்பதத்தை உறிஞ்சி பிசுபிசுப்பு படிவதைத் தடுக்கும். சூரிய ஒளியும் காற்றும் கிச்சனுக்குள் வரும்படி வைத்தால் பூச்சிகளும் கிருமிகளும் உள்ளே வரும் வாய்ப்பு குறையும். குறிப்பிட்ட இடைவெளியில் சிம்னி அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை முறையாக சுத்தம் செய்வது அவசியம்.
3. கிச்சனில் சேரும் கழிவுகளையும் குப்பைகளையும் அன்றாடம் வெளியில் போட்டுவிட்டால் கரப்பான் பூச்சி மற்றும் ஈ போன்றவை கிச்சனுக்குள் உலா வருவதைத் தடுக்கலாம். ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானது இது. மேலும், சிங்க் மற்றும் கழிவு நீர் வெளியேறும் குழாய்களை உடனுக்குடன் கழுவி விட்டால் பிசு பிசுப்பும் அழுக்கும் சேராது.
4. சமையல் முடிந்ததும் கேஸ் ஸ்டவ், கவுண்டர் டாப்ஸ் மற்றும் பாத்திரங்கள், மசாலா பொருள்கள் வைத்திருக்கும் அலமாரிகளை எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் ஈரமில்லாமல் துடைப்பது அவசியம். இதனால் சுகாதாரமும் பாதுகாப்பும் கிடைக்கும்.
5. சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்து சமைக்கலாம். இதனால் பாத்திரத்தின் உள்ளிருந்து நீரோ எண்ணெயோ வெளியே தெறிப்பதைத் தடுக்கலாம். பாத்திரத்தை திறந்து வைத்து சமைக்கும் அவசியம் ஏற்படும்போது, டைல்ஸ் மற்றும் கவுண்டர் டாப்பில் தெறித்திருக்கும் ஆயில் அல்லது உணவுப் பொருட்களை உடனுக்குடன் துடைத்துவிட்டால் பிசுக்கு மற்றும் அழுக்கு சேர்ந்து ஆரோக்கியமற்ற சூழல் உருவாவதைத் தடுக்கலாம்.
மேற்கூறிய 5 ஆலோசனைகளைப் பின்பற்றினால் உங்கள் கிச்சனும் பளபளவென்று ஜொலிக்குமே!