மனதை ரிலாக்ஸ் ஆக்கும் 5 எளிய வழிகள்!

Happy Girl
Happy Girlhttps://www.herzindagi.com
Published on

தொடர்ந்து வேலை செய்வது, வெளியில் செல்வது, குடும்பத்தினரை மட்டும் கவனிப்பது என்று எப்பொழுதும் பரபரப்பாக இருப்பவர்கள் தன்னைத்தானே ரிலாக்ஸ் செய்து கொள்ள மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தனக்கான நேரத்தை. தான் விரும்பும் வழியில் செலவிடலாம். அதற்கு என்ன செய்யலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.

பொழுதுபோக்கு: விளையாட்டு, இசை, நடனம் என்று தங்களுக்கு மிகவும் பிடித்தமான ஏதோ ஒரு விஷயத்தை வாரத்தில் ஒரு மணி நேரமாவது செய்யலாம். இது மனதிற்கு புத்துணர்ச்சியை தரும். புதிதாக முயற்சிக்கும் பொழுது வித்தியாசமாக ஏதோ ஒரு ராகத்தையோ தாளத்தையோ இசைக்க முடியும் பொழுது தன்னம்பிக்கை பிறக்கும். இதனால் மனதில் ஒரு உற்சாகம் பீரிடும். இது அந்த வாரம் முழுவதும் மனதில் ஒரு அமைதி தன்மையை நிலவச் செய்யும். ஆதலால் இசையுங்கள். இசைபட வாழ்வீர்கள்.

இயற்கையில் ரசனை: தினமும் குழந்தைகளுடன் சில நிமிடங்களாவது இயற்கையுடன் செலவிடுங்கள். வீட்டுத் தோட்டத்தில் உலா வருவது, அருகில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சி செய்வது, பீச் சென்று பார்ப்பது, கடலில் காலை நனைப்பதே ஒரு சுகம்தானே! அருகில் மலை இருந்தால் ஒரு விசிட் அடித்து விட்டு வரலாமே. எல்லாவற்றுக்கும் மேலாக மொட்டை மாடிக்குச் சென்று வானத்தை அண்ணாந்து பார்ப்பது, அங்குள்ள நட்சத்திரங்களை ரசிப்பது, சிறிது நேரம் அங்கே நின்று காற்று வாங்குவது,  ஏ.சி, ஃபேனை நிறுத்திவிட்டு கரண்டுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நாமும் நம்மை சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாமே.

சிரிப்பு: சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எந்தச் சூழலிலும் சிரிக்க தெரிந்தவர்கள் எப்படிப்பட்ட பிரச்னைகளையும் கடந்து வருவார்கள் என்பதை அடிக்கடி பார்க்கிறோம், படிக்கிறோம், கவனிக்கிறோம். பல்வேறு பூங்காக்களில் நடைபயில்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, 'அ'வில் இருந்து ஃ வரை விதவிதமாக சிரித்து ரிலாக்ஸ் செய்து கொள்கிறார்கள். இதனால் எல்லா நாளும் இனிய நாளாக கடந்து விடுகிறது. ஆதலால் வாய்விட்டு சிரிப்போம்; நோய் விட்டுப் போகட்டும்!

இதையும் படியுங்கள்:
வெள்ளைக்கார பிள்ளையார் என்று அழைக்கப்படும் கணபதி யார் தெரியுமா?
Happy Girl

அழுகை: உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவற்றை வெளிப்படுத்துங்கள். துக்கம் ஏற்படும்போது அழுங்கள் அல்லது நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்தி ஆறுதல் தேடுங்கள். சிரிப்பு போன்றதே அழுகையும் என்பதை மறந்து விடக்கூடாது. 'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்று கூறுவது மனசை ரிலாக்ஸ் செய்து கொள்ளத்தான். மன அழுத்தம் அதிகமாக உள்ளபோது மனம் விட்டு அழுவோமானால் மனம் மிகவும் அமைதியாகி தூக்கம் வருவதை உணரலாம். பின்னர் தூங்கி எழுந்தவுடன் நம் மனச்சோர்வு அனைத்தும் நீங்கி இருப்பதை உணரலாம். அழுவது நிலையாக நிலைமையை மாற்றாது என்றாலும், அது உடனடியாக நிவாரணத்தையும் தற்காலிகமாக ஆறுதலையும் தருகிறது. ஆதலால் அழுகையை ஒருபோதும் அடக்கக் கூடாது. அப்படி அடக்கும்போது காலப்போக்கில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனப் படலாம். மேலும் அழுகை உணர்வை கட்டுப்படுத்துவது மகிழ்ச்சி மற்றும் அன்பு போன்ற நேர்மறை உணர்வுகளை அனுபவிக்கும் திறன் குறையலாம். நாம் மிகுந்த உணர்ச்சியோடு அழும்போது புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆதலால் துன்ப வேளையில் அழுகை வந்தால் அடக்கி கொள்ளாமல் கண்ணீர் சிந்தி விடுவது கவலைகளை மறக்கச் செய்யும். மேலும் மனதிற்கு ரிலாக்ஸ் தரும் செயல்.

தூக்கம்: தினமும் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கத்தை இழப்பதுதான் மனத்திற்கு பெரும் அழுத்தம் கொடுக்கும். சரியாக தூங்காதவர்கள்தான் சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, இல்லையேல் சாப்பிடாமல் இருப்பது, ஒரே அடியாக வேலை செய்வது, இல்லையென்றால் சோர்வுற்று அப்படியே அமர்ந்திருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. 'ஒரு நாள் தூக்கம் பல நாள் வேலையைக் கெடுக்கும்’ என்பார்கள். ஆதலால் ஆழ்ந்து தூங்கி அமைதியாக எழுந்து வேலைகளை ஆரம்பித்தால், எதிலும் ஒரு நிதானம் தென்படும்.ஏற்ற இறக்கம் இல்லாமல் எல்லாவற்றிலும் நிதானமாக செயல்பட நல்ல உறக்கம் தேவை. இதனால் கண்கள் ஓய்வெடுத்து, எல்லாவற்றிலும் விழிப்புணர்வுடன் செயல்பட அவை நமக்கு அனுமதி வழங்கும். ஆதலால் அயர்ந்து தூங்கி மனசை ரிலாக்ஸ் செய்து கொள்வோமாக!

இந்த ஐந்து செயல்களையும் மனசை ரிலாக்ஸ் ஆக்கும் அறக்கட்டளைகளாக செயல்படுத்தி அனைத்திலும் வெற்றி பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com