வெள்ளைக்கார பிள்ளையார் என்று அழைக்கப்படும் கணபதி யார் தெரியுமா?

Manakula Vinayagar
Manakula Vinayagar

ந்தியாவிலேயே விநாயகர் கோயிலுக்கு தங்கத்தாலான மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டுமே உள்ளது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர் இந்தத் தலத்தில் சித்தி புத்தி என்னும் துணைவியருடன் காட்சி தருகிறார். 8000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இத்தனை சிறப்புகள் வாய்ந்ததுதான் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்.

இந்தக் கோயில் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே சிறிய குழி ஒன்று  உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.

மணக்குள விநாயகரை பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் இவருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது. இந்த விநாயகர் டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என ஐந்து வெளிநாட்டவர்களின் ஆட்சி முறைகளை கண்டவர் அவர். புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின்போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

இக்கோயில் விநாயகர் இடம்புரியாக கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார். கருவறையில் தொள்ளைக்காது சித்தர் அரூபமாக பூஜைகள் செய்வதாக கூறப்படுகிறது. இந்தத் தலத்தில் மாதம் தோறும் சங்கடகர சதுர்த்தி தினத்தன்று நான்கு கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று இந்த பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலும் அதன் ராஜகோபுரம்  இன்னமும் இரு நிலைகளிலேயே உள்ளது. இத்தல விநாயகர் பெருமான் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலேயே தோன்றிவிட்டபோதும் எந்த மன்னரும் இக்கோயிலுக்கு பெரிய அளவில் திருப்பணி செய்யவில்லை. மக்களால் மட்டுமே இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படைத்து விரதத்தை பூர்த்தி செய்தால் எல்லா தடைகளும் நிவர்த்தி அடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகளின் குழந்தைப் பருவம் குறித்து பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்!
Manakula Vinayagar

இக்கோயிலில் தனியாக தீர்த்தக்குளம் என்று எதுவும் இல்லை. எனவே. பிரம்மோத்ஸவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

கோயிலின் உள்ளே இருக்கும் சுதேசி சிற்பங்கள் ஒன்றில் மயிலில் பறக்கும் முருகருடன் விநாயகர் இருக்கிறார். இதுபோன்ற சிற்பம் அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் ஆலயத்திலும் உள்ளது. மணக்குள விநாயகரின் உத்ஸவமூர்த்திக்கு ஐந்து கிலோவில் செய்யப்பட்ட தங்கக் கவசம் உள்ளது. மணக்குள விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழ வகைகள், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணாபிஷேகம், 108 கலசாபிஷேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

 உலகில் உள்ள அனைத்து விதமான விநாயக ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பம்சம். விநாயக சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தல் நன்மை தரும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com