

மனிதர்கள் பலவிதம். அவர்களது குணங்களும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்பொழுது ஒவ்வொருவரையும் கையாள்வதற்கு ஒரு சில யுக்தியை நாம் கையாளத்தான் வேண்டும். அப்பொழுதுதான் எந்தவித பிரச்னையும் இன்றி வாழ்க்கையை அமைதியாக ஓட்ட முடியும். மனிதர்களுக்குள் சிலர் மற்றவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் பிரச்னைக்குரிய மனிதர்களை சமாளிப்பது என்பது ஒரு பெரிய கலைதான்.
தொடர்பை குறைத்துக் கொள்ளவும்: வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களிடம் நாம் நல்லது கெட்டது இரண்டையுமே கற்றுக் கொள்கிறோம். நமக்கு நல்லது செய்பவர்களுடன் நட்பை வளர்ப்பதும், மோசமாக நடந்து கொள்பவர்களிடம் இருந்து விலகி இருப்பதும் நமக்கு நிம்மதியையும் நன்மையையும் தரும். சிலர் எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்னையுடன் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுடன் பழக நேர்ந்தால் நமக்கு மன நிம்மதி கெடுவதுடன், பிரச்னைகளும் வரலாம். இப்படி எப்பொழுதுமே பிரச்னைகளுக்குள் சிக்கிக்கொண்டு சிடுசிடுப்பவர்களிடமிருந்து ஒதுங்கி விடுவது நல்லது.
எதிர்பார்ப்பை தவிர்க்கவும்: பிரச்னைக்குரியவர்களை முடிந்தவரை அவர்களுடனான தொடர்பை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. முடியவில்லை என்றால் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. பிரச்னைக்குரியவர்களிடமிருந்து நாம் எந்தவிதமான எதிர்பார்ப்பையும் கொள்ளாமல் இருப்பது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். பிரச்னைக்குரிய நபர்களை சமாளிக்க அமைதியாகவும் கூலாகவும் இருக்க கற்றுக் கொள்வது அவசியம். இது நம் மனநிலையையும் சூழ்நிலையையும் மேம்படுத்த உதவும்.
எல்லைகளை வகுத்துக் கொள்ளவும்: நமக்கான எல்லைகளை மிகத் தெளிவாக நிர்ணயித்துக் கொண்டு, அதனைத் தாண்டி நம்மை நெருங்கி வந்து தொல்லை கொடுப்பவர்களை தைரியமாக எதிர்க்கொள்ள பழகலாம். நமக்குப் பிடிக்காத செயல்களை அவர்கள் செய்யும்பொழுது தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்கலாம். அதற்கு முதலில் நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கப் பழக வேண்டும். நம்முடைய பலம் மற்றும் திறமைகள் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கைதான் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க மற்றும் எதிர்கொள்ள உதவும்.
கவனமாகப் பேசவும்: அலுவலகம் போன்ற இடங்களில் பிரச்னைக்குரிய நபர்களை எதிர்கொள்ளும்பொழுது மிகவும் கவனமாக பேசவும். ஏனெனில், நம் வார்த்தைகள் நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். பிரச்னைக்குரிய நபர்களிடமிருந்து விலகி இருப்பது அவசியம். பிரச்னைகளைக் கொண்டு வரும் நபர்களையும், அந்தப் பிரச்னைகளையும் கண்டு பெரிதாக ரியாக்ட் செய்தால் அது இன்னும் பெரிதாக, பூதாகரமாகத்தான் தெரியும். எனவே, அந்த விஷயத்திலிருந்து முற்றிலும் தள்ளி ஒதுங்கி இருப்பது நமக்கு யோசிப்பதற்கும், செயலாற்றுவதற்கும் நேரத்தைத் தரும்.
அமைதியாக இருக்கவும்: பிரச்னைக்குரிய மனிதர்களை சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் சில நேரங்களில் அவர்களை நம்மால் ஒதுக்க முடியாத அளவுக்கு அவர்கள் முக்கியமான நபராக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளித்து, மனஅமைதியுடனும் நிம்மதியுடனும் இருக்கப் பழகலாம். இது நம் மனநிலையையும் சூழ்நிலையையும் மேம்படுத்தும்.