ஒரு தந்தையின் பொறுப்பு என்பது வெறும் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்ல. தன் மகனுக்கு வாழ்க்கையின் முக்கிய பாடங்களைக் கற்றுக் கொடுப்பதும் ஒரு தந்தையின் கடமைதான். அந்த வகையில் ஒரு தந்தை தன் மகனுக்கு கட்டாயம் கற்றுத் தர வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். நீங்கள் ஒரு தந்தையாக இருந்தால், இந்த 5 விஷயங்களும் உங்களது மகனின் வெற்றிக்கு அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
1. நேர்மை மற்றும் மரியாதை: ஒரு தந்தை தன் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான பண்புகளில் நேர்மை மற்றும் மரியாதை முதல் இடத்தில் உள்ளது. தன்னுடைய செயல்களில் நேர்மையாக இருக்கவும், மற்றவர்களை மதிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கவும், பொய் பேசாமல் இருக்கவும், வாக்குறுதிகளை காப்பாற்றவும் ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மற்றவர்களை மதித்து பெரியவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
2. சுயநம்பிக்கை: வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் மிகவும் அவசியம். தன்னுடைய திறமைகளை நம்பி புதிய விஷயங்களை முயற்சி செய்யத் தயங்காமல் இருக்க தந்தை மகனுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். தவறுகளுக்கு பயப்படாமல் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற்றம் காண தூண்டுதலைக் கொடுக்க வேண்டும்.
3. பொறுப்புணர்வு மற்றும் கடின உழைப்பு: வாழ்க்கையில் வெற்றி பெற பொறுப்புணர்வும், கடின உழைப்பும் மிகவும் அவசியம். தன்னுடைய செயல்களுக்கு தானே பொறுப்பேற்று, தனது வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து, கடினமாக உழைத்து தன்னுடைய இலக்குகளை அடைய முயற்சி செய்வதன் முக்கியத்துவத்தை தெரியப்படுத்த வேண்டும். பணத்தை சரியாக சேமித்து சிக்கனமாக செலவு செய்யவும் தந்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.
4. அன்பு: ஒரு மகனுக்கு தந்தை அன்பு மற்றும் கருணை பற்றி கற்றுக் கொடுப்பது அவசியமானது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ளவும், அவர்களுக்கு உதவவும் கற்றுக் கொடுக்க வேண்டும். தன்னைப் போலவே விலங்குகள், இயற்கையை மதித்து அவற்றை பாதுகாக்க சொல்லிக் கொடுக்க வேண்டும்.
5. திறமையை கண்டறிந்து வளர்த்தல்: ஒவ்வொரு மகனுக்கும் தனித்துவமான திறமைகள் உள்ளன. எனவே தந்தை தன்னுடைய மகனின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்ப்பதற்கு ஊக்கமளிக்க வேண்டும். மகனின் ஆர்வத்தை தெரிந்துகொண்டு அதில் அவர் ஈடுபட்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உதவ வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு, மகன் தன் அறிவை வளர்த்துக்கொள்ள தந்தை கட்டாயம் உதவி செய்ய வேண்டும்.
இந்த ஐந்து விஷயங்களை ஒவ்வொரு தந்தையும் தன் மகன்களுக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய உதவியாக இருக்கும். நீங்கள் ஒரு ஆண் பிள்ளைக்கு தந்தையாக இருந்தால், இவற்றை கற்றுக்கொடுக்கத் தவறாதீர்கள்.