
குழந்தைகள் எளிதில் கற்கும் திறன் கொண்டவர்கள். அவர்கள் அறிவை மட்டுமல்ல, மதிப்புகள், நடத்தைகள் என்று தங்களின் சுற்றுப்புறங்களிலிருந்து அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதில் நிறைய அவர்கள் கற்றுக்கொண்டாலும், திணிக்கப்படக்கூடாத சில விஷயங்களும் இருக்கின்றன.
1. கேட்க வேண்டிய நேரத்தில் கேட்க தூண்டப்பட வேண்டும்.
சிந்தனைமிக்க கேள்விகளைக் கேட்பதற்குப் பதிலாக குருட்டுத்தனமாக அதை நம்பி பின்பற்ற வைப்பது நல்லதல்ல. குழந்தைகள் ஒரு விஷயத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் அதன் விதிகளை மட்டும் பின்பற்றுவதற்குப் பதிலாக, எதிலும் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று கேட்க ஊக்குவிக்கப்பட வேண்டும். இது சிறுவயதிலே அவர்களுக்கு சுயாதீன சிந்தனையை(independent thinking) வளர்க்கிறது. அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் ஏற்படும் சிக்கலான சூழ்நிலைகளைத் திறம்பட சமாளிக்கவும் உதவுகிறது.
2. உணர்ச்சியை அடக்குவது
குழந்தைகள் அழுவது அல்லது பயத்தை வெளிக்காட்டுவதை பலவீனத்தின் அடையாளம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், அந்நேரத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள் தேவையானது, சமாளிக்கக் கூடியவைதான். அவைகள் வெட்கக்கேடானது அல்ல என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். காரணம் உணர்வுகளை அடக்குவது வயதுவந்த காலத்தில் அவர்களுக்குப் பதட்டம், மோசமான தொடர்பு மற்றும் பிறரின் உணர்ச்சியை மதிக்காமல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
3. எல்லா இடங்களிலும் பாலினம் தேவையில்லை
பாலினத்தின் அடிப்படையில் பொம்மைகள், வண்ணங்கள் அல்லது பிற பொருட்களை குழந்தைகளுக்கு ஒதுக்குவது போன்றவை அவர்களின் சுய வெளிப்பாடு(self-expression), ஆசைகளை மட்டுப்படுத்தலாம்.
இந்தத் தொழில்கள் அல்லது நடத்தைகள் ‘இது ஆண்களுக்கானது’ அல்லது ‘இது பெண்களுக்கானது’ என்று கற்பிப்பது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்துகிறது.
4. தோல்வி என்பது அசிங்கம்
‘தோல்வி வெட்கக்கேடானது’ என்ற கருத்தை சிறுவயதிலே திணிப்பது பெரும் தீங்கு விளைவிக்கும். தவறுகள் கற்றலின் ஒரு பகுதி என்பதை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். காரணம் தோல்வியில் அவர்கள் களங்கம் அடைந்ததாக உணர்ந்தால், அவர்கள் வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கப் பயப்படுவார்கள்.
5. வெற்றி என்பது செல்வம் அல்லது புகழுக்குச் சமம்
‘பணம் அல்லது புகழ் மூலம்தான் உன்னால் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும்’ என்ற கருத்து, ஒரு குழந்தையின் மதிப்பு, அவர்களின் அடையாள உணர்வைக் குறைக்கும். இது தேவையான பல அனுபவங்கள் அல்லது உறவுகளைவிட, புகழ் அந்தஸ்து தேடியே அவர்களை வழிநடத்தக்கூடும். அதற்கு பதிலாக ஒரு மனிதனின் உண்மையான நிறைவு(fulfillment) என்பது அவரின் கருணை, ஆர்வம், ஒரு நோக்கத்துடன்(Purpose) செயல்படுவதில் இருந்துதான் வருகிறது என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்த மனநிலை அவர்களின் கவனத்தை ஒரு பொருளின்(Money) மேலே செலுத்தாமல், அதையும் தாண்டி ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய தன்னம்பிக்கை, அனுதாபம் மற்றும் நீண்ட கால மகிழ்ச்சியை அவர்களுக்குள் விதைக்கிறது.