
சில குழந்தைகள் நம் வீட்டு குழந்தைகளுடன் விளையாடுவதற்கு வீட்டிற்கு வந்தால் நான் எங்கள் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இங்குதான் தூங்குவேன் என்று அடம் பிடிப்பார்கள். மேலும் குறும்புத்தனம் செய்வார்கள். அவர்களை கையாள நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
பக்கத்தில் உள்ள குழந்தைகள் நம் குழந்தையோடு விளையாடுவதற்கு வரும்பொழுதே எதிரில் இருக்கும் பேனாவை எடுத்து ஆங்காங்கே கிறுக்கி வைப்பார்கள். அதை சுத்தம் செய்வது நமக்கு சிரமமாக இருக்கும். அதற்குப் பதிலாக ஒரு ரப் நோட்டு, கிரயான்ஸ், கலர் பென்சில் போன்றவற்றை வாங்கி வைத்து விட்டோமானால், அவர்கள் கையில் இவற்றை கொடுத்து வரையச் சொல்லலாம்.
இதனால் குழந்தைகளின் வரையும் ஓவியத்திறமை வெளிப்படும். வீடும் சுத்தமாக இருக்கும். கடிந்து பேசவேண்டிய அவசியம் ஏற்படாது. அவர்கள் வீட்டிற்குச் சென்றாலும் இதை பின்பற்றுவார்கள். நம் குழந்தையும் அடுத்தவர்கள் வீட்டிற்குச் சென்றால் கிறுக்குவது, கண்ட இடத்தில் வரைவது, போன்றவற்றை செய்யமாட்டார்கள். இதனாலெல்லாம் மற்றவர்களிடம் பாராட்டு பெறும் பொழுது அதை பெரிய உற்சாகமாக ஏற்றுக் கொள்வார்கள்.
அதேபோல் அந்தந்த பொருட்களை நிரந்தரமாக ஒரு இடத்தை காண்பித்து அங்கே வைத்துவிட்டு செல்லுமாறு கூறி, அடுத்த நாள் வரும் பொழுது அவர்களாகவே அதை எடுத்து பயன்படுத்திய பின் வைத்துவிட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து விடுங்கள். அதுபோல் சொல்லி வளர்ப்பதால் நமக்கும் வேலை குறைவு. அவர்களும் ஒரு பொருளை எடுத்தால் அதே இடத்தில் வைக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள்.
அதேபோல் வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றாலும், வேறு எங்காவது உறவினர் வீட்டுக்குச் சென்று வந்தாலும் பார்த்ததை, கேட்டதை, கதை போல் கோர்த்து சொல்லச் சொல்லலாம் .இதனால் வளர்ந்த பிறகு குழந்தைகள் சுவாரஸ்யமாக உரையாடுவார்கள். கதை எழுதுவதையும், வர்ணனையையும் ,தொகுத்துக் கூறுதலையும் திறம்பட கையாளுவார்கள்.
குறிப்பாக ஒரு குழந்தை படிக்கும் பொழுது திரும்பத் திரும்ப எந்தப் பக்கத்தை அதிகமாக படிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் . அப்படி கவனித்த பின்பு அதற்கான வெவ்வேறு புத்தகங்களை வாங்கி பரிசளிக்கலாம். சில குழந்தைகள் கணிதப் புதிரை அதிகம் விரும்பும்.சில குழந்தைகள் அறிவியல் கதைகளை தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.
மேலும் சில குழந்தைககளின் பிறந்த நாள் நமக்குத் தெரியாத பொழுது சில சமயங்களில் வீட்டிற்கு ஸ்வீட் கொண்டு வருவார்கள். அவர்களை வெறுங்கையோடு அனுப்ப நமக்கு மனசு வராது .அதற்காக கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்து பிடித்ததை வாங்கிக் கொள்ளச் சொல்லுவோம். ஆனால் அதை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். எனக்கு கிப்ட் தான் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அவர்கள் விரும்புவது பணத்தை அல்ல. பென்சில் பாக்ஸ், பந்து போன்ற பொருட்களைத்தான். குழந்தைகள் விரும்பும் அந்த மாதிரிப் பொருட்களை வாங்கி வைத்திருந்து , அவர்கள் வரும் பொழுது கொடுத்து மகிழ்விக்கலாம். இதனால் நமக்கும் மகிழ்ச்சி கிட்டும்.
அவ்வப்பொழுது ஃபோட்டோ ஆல்பத்தை காண்பித்து உறவு முறைகளைச் சொல்லிக் கொடுத்து வைப்பது குழந்தைகளுக்கு பாசப்பிணைப்பேற்படுத்தும். உறவினர்கள் வந்தால் அவர்களுடன் நன்றாக ஒட்டிக் கொள்வார்கள். குழந்தைகளின் அன்பை அதிகமாக எதிர்பார்க்கும் உறவினர்களுக்கு குழந்தையின் இந்த வளர்ப்பு முறை மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.
இந்த ஆல்பத்தின் வழியாக உங்களையும் நீங்கள் மீளாய்வு செய்து கொள்வதுடன், பிள்ளையின் உணர்வுகளையும் அவர்களையும் அறிந்து கொள்ளலாம். உங்களையும் குழந்தைகள் நன்றாக புரிந்து பழக ஆரம்பிப்பார்கள்.