அலுவலகத்திற்கு பணிபுரியும் அனைவரும் ஒரே நோக்கத்தோடுதான் வருவர்கள். அதாவது, பணம் சம்பாதிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால், பல மணி நேரங்களை நாம் அலுவலகத்திலேயே கழிக்கவேண்டி இருப்பதால் சக பணியாளர்களிடம் பேசும்போது கீழ்க்கண்ட 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தனிப்பட்ட நிதி விவரங்கள்: நமது நிதி தொடர்பான விஷயங்களை, அதாவது சம்பளம், கடன் பிரச்னை, முதலீடு போன்றவற்றை யாரிடமும் கூறக்கூடாது. அனைவரும் இவற்றை நல்ல முறையில் நினைக்க மாட்டார்கள் என்பதைத் தாண்டி நமது வாழ்க்கை முறையை வைத்து நம்மை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வாய்ப்பு அதிகம் என்பதால் பணம் குறித்த விஷயங்களை அலுவலகத்தில் விவாதிக்கக் கூடாது.
2. உடல்நலப் பிரச்னைகள்: நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் யாரிடமாவது சொல்லத் தோன்றும். அந்த சமயங்களில் நம்முடைய உடல் நலப் பிரச்னைகள் குறித்து பணிபுரிபவர்களுடன் கூறக் கூடாது. ஏனெனில், இது சில நாட்கள் கழித்து நமக்கே எதிரொலிக்கும் என்பதால் விடுமுறையை யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் மட்டும் தெரிவித்தால் நல்லது.
3. அரசியல் மற்றும் மதம் சார்ந்த கருத்துக்கள்: அரசியல், மதம் சார்ந்த கருத்துக்கள் நம் பார்வையில் இருப்பது போல மற்றவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் பணியிடத்தில் இந்தப் பேச்சுக்களை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் விவாதங்கள் மட்டுமன்றி, சண்டைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.
4. மேனேஜர் குறித்து பேசுவது: உடன் வேலை பார்ப்பவர்கள் பற்றியோ, நிறுவனம் பற்றியோ குறை கூறுவது, கிசுகிசு பேசுவது போன்றவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் என்பதாலும், மேலும் நிறுவனத்திற்குள்ளேயே கருப்பு ஆடாக இருந்து நீங்கள் பேசுவதை மேலிடத்தில் போட்டுக் கொடுக்க வாய்ப்பு இருப்பதால் இதுபோன்ற விஷயங்களைப் பேசக் கூடாது.
5. எதிர்கால வேலைத் திட்டங்கள்: நமது வேலை குறித்த எதிர்காலத் திட்டங்களை பிறரிடம் கூறாமல் இருப்பது மிகவும் நல்லது. ஏனெனில், ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மற்றொரு நிறுவனத்தில் வேலைக்கு முயற்சி செய்வது தெரியவந்தால் தற்போது உள்ள வேலைக்கு பாதகமாக முடியும் என்பதால் எதிர்கால வேலை குறித்த திட்டங்களை பணியிடத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய ஐந்து விஷயங்களை பணியிடத்தில் பேசாமல் இருப்பதாலே நமக்கு தற்போது பணியிடத்தில் மரியாதை அதிகரித்து, மென்மேலும் அடுத்தடுத்த பதவிகளுக்கு செல்ல வாய்ப்பு தானாகத் தேடி வரும்.