சூரசம்ஹாரம் நடைபெறாத முருகப்பெருமானின் படை வீடு எது தெரியுமா?

Thiruthani Muruga Peruman
Thiruthani Muruga Peruman
Published on

முருகப்பெருமானை நினைத்தாலே மனதில் ஆனந்தம் உண்டாகும். கந்த சஷ்டி விரத நாளில் முருக பக்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை மனதில் வைத்து இறைவனை முழுவதுமாக சரணடைந்து பல்வேறு வகையில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். சஷ்டி விரதத்தின் நிறைவு நாளில் முருக பக்தர்கள் உணவு, நீரின்றி மிகத் தீவிரமாக விரதம் இருந்து அன்று மாலை நிகழும் சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் முருகப்பெருமான் தனது வேல் ஆயுதத்தால் செய்யும் சம்ஹார நிகழ்வைக் கண்டு களிப்பார்கள். மறுநாள் முருகப்பெருமான் தெய்வானை திருமண நிகழ்வை கண்குளிர கண்டு வழிபட்டு தங்களின் விரதத்தை முடிப்பார்கள்.

கந்த சஷ்டி வழிபாடும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகள் மற்றும் பெரும்பாலான முருகத் தலங்களில் மிகவும் கோலாகலமாகக் கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால், முருகப்பெருமானின் ஒரே ஒரு படை வீட்டில் மட்டும் இந்த கந்த சஷ்டி நிகழ்வு நடைபெறுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அது  முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணிகைதான். சூரர்களை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் சினம்  தணிந்து வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய திருத்தலம்தான் திருத்தணி.

தணிகை என்பதன் பொருளே சினம் தணிதல்தான். திருத்தணி தணிகை முருகன் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இதன் காரணமாகவே இக்கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. இருப்பினும், முருகனின் அருளைப் பெறக்கூடிய கந்த சஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி கோயிலில் வள்ளி திருக்கல்யாண நிகழ்வு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை கண் குளிரக் காண்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீ மகாவிஷ்ணு திருத்தணிகை முருகனை வழிபட்டு சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம். அவர் உருவாக்கியதுதான் விஷ்ணு தீர்த்தம். திருமாலிடமிருந்து தாம் கைப்பற்றிய சக்ராயுதத்தை முருகன் மீது ஏவினான் தாரகாசுரன். அதைத் தனது மார்பில் ஏற்றுக்கொண்டார் முருகன். பிறகு அந்த சக்ராயுதத்தை திருமாலிடமே ஒப்படைத்தார். இன்றும் தணிகை முருகனின் திருமார்பில் சக்ராயுதம் பதிந்த அடையாளத்தைக் காணலாம். இவரது பாதத்தின் கீழே ஆறு எழுத்து மந்திரம் குறித்த யந்திரம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?
Thiruthani Muruga Peruman

திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்கவேண்டி தவம் செய்தனர். இவர்களில் அமுதவல்லி தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகப்பெருமானை மணந்தனர். சகோதரிகள் இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் திருத்தணியில் வள்ளியும் தெய்வானையும் ஒரே அம்பிகையாக கஜவள்ளி என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் தனது வலது கையில் வள்ளிக்குரிய தாமரையையும் இடக்கையில் தெய்வானைக்குரிய நீலோத்பல மலரும் வைத்திருக்கிறாள்.

திருத்தணியில் முருகப்பெருமானுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகப்பெருமானுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாக சொல்லப்படும் சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. வழிபாட்டுக்குப் பிறகு பிரசாதமாகத் தரப்படும் இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளாமல், நீரில் கரைத்துக் குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழா காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com