
திருமணம் என்பது இருமனங்களை இணைக்கும் உணர்வுப்பூர்வமான பந்தமாகும். திருமண வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு விட்டுக்கொடுத்து, இன்ப துன்பங்களில் துணையாக நின்று அனுசரித்து ஒருமித்து வாழ வேண்டியது அவசியமாகும். மகிழ்ச்சியான தம்பதிகளாக பல வருடம் வாழ்வதற்கு திருமண வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்களைப் பார்க்கலாம்.
1.மன்னிப்பு கேட்பதை தள்ளிப்போட வேண்டாம்
உங்களுடைய துணையுடன் சண்டை ஏற்பட்டால், தவறு யார் மீது இருந்தாலும், விரைவில் மன்னிப்பு கேட்டு விடுவது நல்லது. அவர்கள் வந்து கேட்கட்டும் என்று தாமதிப்பது உறவில் விரிசலை ஏற்படுத்தும். ஏனெனில், புண்பட்ட உணர்வு நீண்ட நேரமாகும் போது வெறுப்புணர்வாக மாறத் தொடங்கும். மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் சண்டையே போட மாட்டார்கள் என்றில்லை. ஆனால், எந்த நேரத்தில் எப்படி தன்னுடைய துணையை சமாதானப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பார்.
2.கவனக்குறைவை தவறாக கருத வேண்டாம்
உங்களுடைய துணை சில விஷயங்களில் கவனக்குறைவாக இருக்கும் போது அதை கடுமையாக விமர்சசிக்க வேண்டாம். அடுத்த முறை கவனக்குறைவோடு இல்லாமல் இருக்க வழிக்காட்ட வேண்டியது அவசியமாகும். மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதையும், கவனக்குறைவாக இருப்பதற்குமான வித்தியாசத்தை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அதனால் அவர்களிடம் பிரச்னை வருவது குறைவாக இருக்கும்.
3.சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க வேண்டாம்
நீங்கள் உங்கள் துணை மீது எவ்வளவு அக்கறையோடு இருக்கிறீர்கள் என்பதை காட்டுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் செய்துவிடுவது நல்லது. சண்டையில் நீண்டநேரம் காத்திருப்பு உறவில் விரிசல் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதனால் தம்பதிகளுக்குள் நெருக்கம் குறையக்கூடும். அதற்கு வழிக்கொடுக்காமல் அன்யோன்யமாக இருப்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
4.குறைத்து மதிப்பிட வேண்டாம்
உங்கள் துணை செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி குறைக்கூறாதீர்கள். பொதுவெளியில் அவர்கள் செய்யும் தவறைக் குறைக்கூறி அவமதிக்காமல், தனிமையில் அவர்கள் செய்த தவறைப்பற்றி எடுத்துக்கூறி திருத்திக் கொள்ள சொல்வது நல்ல மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
5. துணையை பாராட்ட தயங்க வேண்டாம்
உங்கள் துணை ஏதேனும் செயலை சிறப்பாக செய்திருந்தால் அவர்களை மனதில் மட்டும் பாராட்டாமல் வார்த்தைகளால் மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். இது அவர்களை உற்சாகப்படுத்தி இல்லற வாழ்வு சிறப்பாக அமைய உதவும். இந்த 5 பழக்கங்களையும் திருமண வாழ்வு சிறப்பாக அமைவதற்கு பின்பற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள்.