
விடுமுறையில் ஸ்மார்ட் போன் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு குழந்தைகள் ஆர்வமுடன் ஈடுபட உதவும் ஆறு வகையான ஆர்ட் ஆக்டிவிட்டீஸ்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஃபிங்கர் பெயிண்ட்டிங்: இது பல குழந்தைகளுக்குப் பிடித்தமானதொரு ஆக்ட்டிவிட்டி எனலாம். அவர்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து செய்யக்கூடியது. இதற்கு பிரஷ், கேன்வாஸ், வண்ணங்களை கலக்கத் தேவையான தட்டு என எந்தவொரு உபகரணங்களும் தேவையில்லை. தரையில் சில பேப்பர் ஷீட்களைப் பரத்தி, அதில் குழந்தைகள் விரல்களை உபயோகித்து, தங்களின் கற்பனைக்கேற்ற உருவங்களை வரையலாம். வாட்டர் கலர் கேனிலிருக்கும் பெயிண்ட்டை எடுத்து உருவங்களுக்கு விரல்களாலேயே வண்ணம் தீட்டி மகிழலாம்.
2. இயற்கை முறையில் வாட்டர் கலர் தயாரிக்க கற்றுக்கொள்ளல்: வீட்டில் உள்ள மஞ்சள் பொடி, பீட்ரூட், பசலை இலைகள், காபி பொடி, ப்ளூ-பீ ஃபிளவர் போன்றவற்றை, தனித்தனியாக, கொதிக்கும் நீரில் நசுக்கிப் போட்டு, தண்ணீர் நிறம் மாறி, அளவில் சுருங்கி வரும்போது, அதை எடுத்து வண்ணச் சாயமாக உபயோகிப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம்.
3. மண்டாலா ஆர்ட் ஷீட்ஸ்: மண்டாலா ஆர்ட் ஷீட்களில், ஜாமெட்ரிக்கல் கோடுகளால் வரையப்பட்டிருக்கும் உருவங்களை வண்ணம் தீட்டிக் காட்டும்படி குழந்தைகளிடம் கொடுக்கலாம். இது அவர்களின் கூர் நோக்கும் சக்தியை அதிகரிக்கவும், அமைதியுடன் ஓரிடத்தில் அமர்ந்து ஒரு கலையை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவும் உதவும்.
4. பேப்பர் ஷீட்களால் பூக்கள் செய்வது: திக்கான கலர் பேப்பர் ஷீட்களை உபயோகித்து இலைகளுடன் பூக்கள் செய்வது எப்படி என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது மற்றொரு ஆர்ட் ஆக்ட்டிவிட்டி. இதற்கு ஒரு கத்திரிக்கோல், கலர் பேப்பர், பசை போன்ற பொருட்கள் போதுமானது. இவற்றைக் கொண்டு, பேப்பரை வெட்டி, இலைகள், இதழ்கள் போன்ற உருவங்கள் செய்து அவற்றை சேர்த்து ஒட்டி பூக்கள் செய்து காண்பிக்க சொல்லலாம்.
5. பழைய ஷர்ட் அல்லது டீ ஷர்ட்களுக்கு வண்ணச் சாயம் பூசுதல்: பழைய வெள்ளை நிற ஷர்ட் அல்லது டீ ஷர்ட்டை எடுத்து அதை முறுக்கி ரப்பர் பேண்ட் போட்டு கட்டிவிட்டு, ஃபேப்ரிக் டை கலந்த பக்கெட் நீரில் முக்கி, சில மணி நேரம் கழித்து எடுத்து பிளைன் வாட்டரில் அலசி வெய்யிலில் காய வைத்தால் புது டிசைன் ஷர்ட் கிடைக்கும். குழந்தைகளுக்கு இது புது அனுபவம் தரும்.
6. பிளே-டோ ஆக்ட்டிவிட்டீஸ் (Play-dough activities): மிக சிம்பிளானது. பக்கத்திலுள்ள பெரிய ஸ்டோரிலிருந்து பிளே-டோ வாங்கி வந்து குழந்தைகளிடம் கொடுத்தால் போதும். பல நிறங்களில் கிடைக்கும், களிமண் போன்ற டெக்ச்சர் கொண்ட இந்த பிளே-டோ வைத்து குழந்தைகள் அவரவர் படைப்பாற்றல் திறனை உபயோகித்து பழங்கள், விலங்குகள், வீடு மற்றும் கார் போன்ற உருவங்கள் செய்து அசத்தி விடுவர். தேவைப்பட்டால் உங்கள் சமையலறையில் இருக்கும் ரோலிங் பின் அல்லது கட்டர்களை (cutters) கொடுத்தும், ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் உருவங்களை உருவாக்க உதவி புரியலாம். அவர்கள் செய்து தந்த உருவங்களை வெயிலில் காயவைத்து ஷோகேஸில் வைத்துக் கொண்டால், சம்மர் வெகேஷன் நினைவுச் சின்னங்களாக அவை விளங்கும்.