
விடுமுறை என்றால் ஓய்வு எடுப்பது, தூங்கிக் கழிப்பது என்பது தானே வழக்கமாக உள்ளது. "ஓய்வு என்பது செய்யும் வேலையை மாற்றி, வேறு வேலைகளில் ஈடுபடுவது தானேயன்றி, சும்மா இருப்பது அல்ல" என்று கூறி இருக்கிறார் இந்திரா காந்தி.
பரபரப்பான வேலை நாட்களில் நேரமின்மையால் செய்ய முடியாத, பல வேலைகள் உள்ளன. வீடு சுத்தம் செய்தல், வாகனங்களை கழுவி துடைத்தல், வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைவீதிக்குச் சென்று வாங்கி வருதல், தலையணை உறை, பெட்ஷீட் போன்றவற்றை துவைத்தல், அலமாரிகளில் உள்ள மளிகை முதலான பொருட்கள், புத்தகங்களை தூசி போக்கி ஒழுங்காக அடுக்கி வைத்தல் என்று பல வேலைகள் உள்ளன.
எல்லா வேலைகளையும் குடும்பத்தில் உள்ள பெரியவர் முதல் சிறியவர் வரை பகிர்ந்து செய்தால், வேலைகளும் முடியும். இடையிடையே ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசியும் கொள்ளலாம்.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ரயில்வே ரிசர்வேஷன் பார்ம், வங்கி சலான் போன்றவைகளை எப்படி நிரப்புவது என்று சொல்லித் தரலாம்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிதானமாக உணவை ரசித்து, ருசித்து சாப்பிடலாம். இவையெல்லாம் மற்ற வேலை நாட்களில் முடியுமா..?
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, மாலையில் குடும்பத்தாரோடு வெளியிடங்களுக்கு சென்று வந்தால் உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
இரவில் சீக்கிரமே உணவு சாப்பிட்டு, தூங்கி ஓய்வு எடுக்கலாம். உடல் களைப்பினால் ஆழ்ந்த உறக்கம் வரும்.
பகலில் தூங்கி டிவி பார்த்து போனில் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்காமல் விடுமுறை நாட்களை பயன்படுத்தினால் வீடும் சுத்தமாக இருக்கும். அடுத்து வரும் வேலை நாட்கள் பரபரப்பின்றி அமைதியாகக் கழியும்.