தற்போது உள்ள இளைய தலைமுறையினர் சிறு விஷயத்திற்குக் கூட விவாகரத்து என்ற முடிவை எடுத்து விடுகின்றனர். இதனால் இருவருடைய வாழ்க்கையும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. அந்த வகையில், விவாகரத்துக்கான முக்கியமான சில காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பர்ஃபெக்ஷன் எதிர்பார்க்காதீங்க!
சிலர், ‘நாம் பர்ஃபெக்டான நபராக இருக்கிறோம்’ என்ற எண்ணத்தில் துணையின் சின்னச் சின்ன பலவீனங்களையும் சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பர். அதிலும் துணையையும் பர்ஃபெக்ட்டான நபராக்கினால்தான் வாழ்க்கையே உருப்படும் என்ற அளவுக்கு பிடிவாதமாக இருப்பது அறிவின்மையின் உச்சக்கட்டம். சிறு சிறு பலவீனமான செயல்களையும் ஏற்றுக்கொண்டு வாழப் பழகி விட்டால் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு மகிழ்ச்சி அடையலாம்.
2. கெட்ட வார்த்தைப் பேசாதீங்க!
சிலர் எந்த ஒரு சிறு விஷயத்தையும் விவாதப் பொருளாக்கி உணர்ச்சி கொந்தளிப்பில் பேசவே முடியாத அளவிற்கு அசிங்கமான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் பேசுவதால் சிறு விஷயமும் பெரிய சண்டையாக மாறுவதோடு, விவாகரத்து வரை சென்று விடுகிறது. விவாகரத்து கேட்டு வரும் தம்பதியரை ஓர் அறையில் தனியாக உட்கார வைத்து சோதிக்கும் உளவியல் முறையில் இருவரும் சண்டை இல்லாமல் பேசினால் விவாகரத்தை கைவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம்.
3. முடிஞ்சதை தோண்டி எடுக்காதீங்க!
‘நீ/நீங்க ஏற்கெனவே அன்னைக்கே அப்படித்தான் நடந்துக்கிட்டீங்க. உங்க குடும்பத்துக்கே இதுதான் பொழப்பு. கல்யாணத்தன்னிக்கு கூட இப்படித்தானே நீங்க எல்லாரும் நடந்துகிட்டீங்க’ என பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பிரச்னைகளை எல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வந்து சண்டை போடுவது ஆபத்தான ஒன்று. அற்ப காரணங்களுக்காக தம்பதியர் பிரிந்துபோவதும் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தவறான முடிவுகள் எடுப்பதற்கும் இந்த வகை பழைய சண்டைகள் காரணமாக அமைகின்றன.
4. குறை கண்டுபிடிக்காதீங்க!
எல்லா கணவன், மனைவியுமே தங்கள் பார்ட்னரிடம், ‘இவங்க வெளியில போனாலே லேட்டாதான் கிளம்புவாங்க’ என்பது மாதிரி சில குறைகளைக் கண்டுபிடித்து வைத்திருப்பார்கள். வெளியில் சொல்லி சண்டை போடுபவர்கள் ஒரு ரகம் என்றால், மனதுக்குள்ளேயே வைத்து சண்டையிடுபவர் இன்னொரு ரகம். இந்தக் குறை மட்டும் சொல்லும் இயல்பினால் வீட்டின் நிம்மதியே பறிபோகும். சமாதானத்திற்கான டெக்னிக், இருவரும் 21 நாட்கள் தொடர்ந்து வாழ்க்கைத் துணையின் குறையை கண்டுபிடிக்காமல் சொல்லவும் செய்ய மாட்டேன் என்ற உறுதியை எடுத்துக்கொண்டு 100 சதவிகிதம் கடைபிடிப்பதோடு இதற்கு ஒரு கயிறை கட்டிக்கொண்டு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தால் குறை சொல்லும் இயல்பு மறைந்துவிடும் அளவுக்கு மிகச் சிறந்த முறையாகும் இது.
5. கேலி செய்யாதீங்க!
கணவனும் மனைவியும் மற்றவரை காயப்படுத்துகிற அளவுக்கு கேலியும் கிண்டலும் செய்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏதாவது ஒரு செயல் தவறாகி விட்டால், 'நீ ஒரு முட்டாள். உனக்கு எதுவும் தெரியாது’ என்கிற தொனியில் கேலி செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
6. பெட்டரான நபரை தேடாதீங்க!
தேடல் என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி இருந்தா இந்தத் துணையை விட வேறு பெட்டரான துணை கிடைத்திருக்கலாம் என்று எண்ணும்போது வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஆதலால், இந்தத் தேடலை தொலைத்து விடுவதே மிகவும் நல்லது.
மேற்கூறிய 6 செயல்களை கணவனும் மனைவியும் செய்யாமல் இருந்தாலே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் போய்விடும்.