நம் முன்னோர்கள் செய்த செயலில் எதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சாம்பிராணி தூபம் போடும்போது சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல் பாதுகாக்க உதவுகின்றது. அதனால்தான், நமது முன்னோர் அன்றே, வீடுகளில் வாரமிருமுறை சாம்பிராணி புகைக்கச் சொல்லி அறிவுறுத்தி வந்தனர். சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது. இது சுவாசக் கோளாறுகளை சீர் செய்வதுடன் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
பொதுவாக, அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு, கடைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள கெட்ட காற்றை அகற்றும். மேலும், நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்று அபாயத்தைத் தடுக்கும். விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும். எதிர்மறை எண்ணங்களைக் குறைக்கும். மேலும், தலைக்கு சாம்பிராணி புகையைக் காட்டி வர, தலை முடி கருமையாக வளர்வதுடன் நீண்ட நாட்கள் வரை தலை முடி நரைக்காமல் இருக்கும். தற்போதைய ஆய்வுகளில், குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்றுநோயை சரியாக்கக்கூடிய மருத்துவத் தன்மை மிக்கவை என குறிப்பிடுகின்றன.
பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சாம்பிராணி சரி செய்வதாகக் கூறுகிறார்கள். வீடுகளில் சாம்பிராணி புகை போடும் பழக்கம் மனச்சோர்வை நீக்கி, புத்துணர்வு தருவதுடன் நேர்மறை எண்ணங்களையும் கொடுக்கிறது. ஆயுர்வேதத்தில் குடலில் சேரும் வாயுவை அகற்றுவதற்கும், கபத்தை வெளியேற்றுவதற்கும், மூலம், வாத நோய்களை போக்கவும் சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது.
தாவரவியலின்படி சாம்பிராணியானது, ‘சாய் மரூபே சேயி’ என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. ‘சாய் மரூபா' என்ற கிரேக்க சொல்லுக்கு ‘கசப்புச் சுவையுடைய மரத்துண்டு’ என்று பொருள். சந்தனம், இலாமிச்சை வேர், சாம்பிராணி தலா 25 கிராம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு, ஏலம், லவங்கம், தலா 16 கிராம், அகருகட்டை 25 கிராம், சீனிசர்க்கரை 60 கிராம் என அனைத்தையும் நன்றாகப் பொடி செய்து சிறிது பன்னீர் விட்டுப் பிசைந்து, சூரிய ஒளியில் உலரவைக்க வேண்டும்.
நன்றாக உலர்ந்ததும், இந்தத் தூள்களை மீண்டும் நன்றாகப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியைக் கொண்டு தூபமிட்டால், பனி காலத்தில் குளிந்த நீரில் தலைக்குக் குளிப்பதால் உண்டாகும் தலைநோய், நீர்கோர்த்தல், ஜலதோஷம், மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைமுடியில் உண்டாகும் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.
சாம்பிராணி பிசினை பொடி செய்து, நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, மூட்டுகளில் பூசி வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் மூட்டு வலி குணமாகும். பாலில் கலந்து குடித்தால் இருமல், மார்புச் சளி, இரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும். குங்கிலியப் பொடியை முள்ளங்கிச் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.
தூபம் என்றாலே நம் நினைவிற்கு வருவது சாம்பிராணிதான். பனிக் காலத்தில் சாம்பிராணியுடன் தூதுவளை, வேப்பிலை, கரிசலாங்கண்ணி இலை போன்றவற்றைச் சேர்த்து வாரம் இருமுறை வீட்டில் தூபம் போட்டு வர, பனிக் காலத்தில் ஏற்படும் அவஸ்தைகளைத் தவிர்க்கலாம்.