ஸ்டாயிஸிசம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கிரேக்க தத்துவம் ஆகும். இது மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தவும், நல்லொழுக்கமான வாழ்க்கையை வாழவும் சவால்களை வழிநடத்தவும் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சியை அடையவும் உதவுகிறது. இந்த தத்துவம் சொல்லும் ஆறு நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பிறர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது: மனிதன் ஒரு சமூக விலங்கு. தனது குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் பிறருடைய கருத்துக்களை மதிக்க வேண்டும் என்று விரும்பும் இயல்புடையவன். ஆனால், தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு மரியாதை தந்தால்தான் நிம்மதியாகவும் மன அமைதியுடனும் வாழ முடியும் என்பதைப் புரிந்து கொண்டால் பிறருடைய கருத்துக்குத் தேவையில்லாமல் அதிக முக்கியத்துவம் தரத் தோன்றாது.
2. கட்டுப்பாட்டில் இல்லாததை விட்டு விடவும்: பிறர் தங்கள் இஷ்டப்படியே நடக்க வேண்டும் என்று ஒருவர் எண்ணுவதும் தவறு. அது தேவையில்லாத மனப் பதற்றத்தை உருவாக்கும். நிம்மதியின்மையை கொடுக்கும். எனவே, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். அலுவலகத்துக்குச் செல்லும்போது திடீரென மழை பெய்தால் அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், மழை பெய்யும்போது ரெயின் கோட் அல்லது குடை எடுத்துச் செல்வது அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள உதவும்.
3. எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல்: தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி மனதை பயிற்றுவிக்க வேண்டும். இதனால் துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை அமைதியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரும்.
4. தற்போதைய தருணத்தில் வாழ்தல்: கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படுவதோ அல்லது எதிர்கால நிச்சயமற்ற நிலைகளை எண்ணி அஞ்சுவதோ தற்போதைய நிகழ்கால வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்க விடாமல் செய்யும். எனவே, தற்போதைய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த கணத்தில் வாழ வேண்டும் என்பதை ஸ்டாயிஸம் வலியுறுத்துகிறது.
5. பொறுமையை வளர்த்துக்கொள்தல்: துன்பங்களை சமாளிக்கவும், வாழ்வில் நிலையற்ற தன்மையை உணரவும், சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சவாலான சூழ்நிலைகளை எளிதாகக் கையாளலாம்.
6. நன்றி உணர்வு: எப்போதும் வாழ்வில் என்ன இல்லை என்று நினைத்து கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும். கடவுள் கொடுத்த நல்ல விஷயங்களுக்காக நன்றி செலுத்த வேண்டும். இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுபட்டு நேர்மறையான எண்ணங்கள் உருவாகி வாழ்வு மேம்படும்.