சூர்தாசரின் வியக்க வைக்கும் கிருஷ்ண பக்தி!

Sri Krishna with surdosar
Sri Krishna with surdosarhttps://www.tribuneindia.com

சூர்தாசர் பிறவியிலேயே கண் பார்வையை இழந்தவர். கண் பார்வை இல்லாததால் அவரது குடும்பம் அவரை புறக்கணித்தது. ஒரு நாள் திண்ணையில் அமர்ந்திருந்த அவரது காதுகளில் இனிமையான கிருஷ்ண பஜனை பாடல்கள் கேட்டது. தெருவில் சிலர் பாடிக்கொண்டு சென்றனர். அந்தப் பாடல்களைக் கேட்டு பரவசமடைந்த சூர்தாசர் அதில் ஒருவரை அழைத்து, "ஐயா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரைப் பற்றியது? மிகவும் நன்றாக இருக்கிறதே?” என்று கேட்டார்.

அதற்கு அவர், "இந்தப் பாடல்கள் கண்ணனைப் போற்றி, அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள்" எனச் சொல்ல, உடனே சூர்தாசர், "நீங்கள் போற்றிப் பாடிய கண்ணன் எப்படி இருப்பார்?" என்று கேட்டார்.

"ஐயா கண்ணன் சிறு குழந்தை. நீலவண்ண மேனி கொண்ட அவனைப் பார்த்தால் பரவசம் அடையும் நமது மனம். கையில் புல்லாங்குழல் வைத்து இசையால் இந்த உலகத்தை இயங்கச் செய்பவன்" என்றெல்லாம் கண்ணனை வர்ணித்துவிட்டு கிளம்பிவிட்டார் அவர்.

இதைக்கேட்ட சூர்தாசர் மனதில், கண்ணன் நீல வண்ணத்தில் சிறு குழந்தையாக புல்லாங்குழல் ஊதியபடி தங்கினான். கண்ணனை நினைத்த அவர்  மனதின் பக்தி இசையாய் வெளிவந்தது. தனது வீட்டை விட்டு சென்று ஒரு ஆற்றங்கரையின் மரத்தின் அடியில் அமர்ந்து தினமும் கண்ணனின் வடிவத்தை எண்ணி பல பாடல்களை இவர் பாடினார். இவரது இனிமையான பாடல்களைக் கேட்க கூட்டம் கூடியது. அந்த மக்கள் தரும் உணவு அவர் பசியை ஆற்றியது.

ஒரு நாள் துளசி ராமாயணம் எழுதிய துளசிதாசர் எனும் கிருஷ்ண பக்தர் சூர்தாசரின் பாடல்களைக் கேட்டு அகமகிழ்ந்து அவரை நண்பராக வரிந்து தன்னுடனேயே கோயில்களில் பாட அழைத்துச் சென்றார்.

ஒரு சமயம் இருவரும் கோயிலுக்குச் செல்லும் வழியில் மக்கள் பதறி அடித்து ஓடி வந்தனர். துளசிதாசர் காரணம் கேட்க, 'மதம் பிடித்த யானை ஒன்று துரத்தி வருவதாகவும், அதனால்தான் ஓடுகிறோம் என்பதுடன் நீங்களும் ஓடி ஒளியுங்கள்' என்று சொல்லி ஓடினர் மக்கள்.

சூர்தாசர், "யானை என்றால் எப்படி இருக்கும்?" என்று துளசிதாசரை கேட்க, அவர் "யானை என்பது மிகப்பெரிய ஒரு மிருகம். அதற்கு கோபம் என்ற மதம் பிடித்து விட்டால் எல்லோரையும் அழித்து விடும். அதனால்தான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள்" என்று சொல்லிவிட்டு, "நம் இருவரின் மனதிலும் கண்ணன் இருக்கிறான். நாம் ஏன் பயப்பட வேண்டும்? அமைதியாக கண்ணனை நினைத்து கண்ணை மூடிக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு துளசிதாசர் கண்ணனை நினைத்தவாறு தியானத்தில் மூழ்கினார்.

மதம் பிடித்து ஓடி வந்த யானை துளசிதாசருக்கு எதிரில் மண்டியிட்டு வணங்கி விட்டு சாந்தமாக சென்றுவிட்டது. மக்கள் ஆரவாரிக்க கண் விழித்த துளசிதாசர், சூர்தாசர் எங்கே என்று பார்த்தார். இரு கைகளையும் நெஞ்சில் வைத்து மறைத்தவாறு ஒரு மரத்தின் பின்னால் நடுங்கிப் போய் நின்றார்  சூர்தாசர். துளசிதாசருக்கு வியப்பாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
ஒமேகா 6 கொழுப்பு அமிலம் எந்தெந்த உணவுகளில் உள்ளன தெரியுமா?
Sri Krishna with surdosar

"வெளியே வாருங்கள் நண்பா. மற்றவர்கள் பயந்து ஓடலாம். கண்ணன் மீது பக்தி கொண்ட நாம் ஏன் பயந்து ஓட வேண்டும்? நீங்கள் இங்கு ஒளியும் காரணம் என்ன?"  என்று கேட்டார்.

"ஐயா, உங்கள் மனதில் இருக்கும் கண்ணன் இளமை துள்ளலுடன் இருக்கும் வாலிபன். யானையை எதிர்த்து அவரால் விரட்ட முடியும். ஆனால், என் மனதில் இருக்கும் கண்ணனோ, சிறு குழந்தை. அவனால் எப்படி யானையை விரட்ட முடியும்? அவன் யானையைப் பார்த்து பயந்து விட்டால் என் மனது தாளாது. அவனின் புன்சிரிப்பை பார்த்துதான் நான் பாடல்களை பாடி வருகிறேன். அவன் பயந்த முகத்தை பார்த்தால் என் மனம் பதைக்கும், அதனால்தான் என் இரு கைகளையும் நெஞ்சில் வைத்து அவன் பார்த்து விடாதபடி மறைத்துக் கொண்டேன். ஏதும் தவறு இருந்தால் மன்னியுங்கள்" என்று பணிந்து நின்றார்.

"இதுவல்லவோ பக்தி" என்று வியந்த துளசிதாசரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். நான் முற்பிறவியில் செய்த புண்ணியமே இவரை எனது நண்பனாக அடைந்தது, இனிவரும் பிறவிகளிலும் என் நண்பனாக இவரே வரவேண்டும் என்று சூர்தாசரை ஆரத்தழுவினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com