
கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க ஏசியை மட்டும் நம்பி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கொளுத்தும் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க சில குறிப்புகள்.
வண்ணத் தேர்வு:
வெயில் காலத்திற்கு ஏற்ற பெயிண்ட்கள் கிடைக்கின்றன. வீட்டின் சூட்டை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு நாம் அடிக்கும் வண்ணங்களில் தான் உள்ளது. கோடை காலத்தில் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அடர்த்தியான வண்ணங்களை விட மெலிதான வண்ணங்களே சூட்டையும், வெளிச்சத்தையும் கிரகித்துக் கொள்ளாமல் பிரதிபலிக்கும். ஐவரி, வெளிர் பச்சை, பிங்க் போன்ற நிறங்கள் வீட்டிற்குள் குளிர்ந்த தன்மையை உண்டாக்கும்.
இயற்கையான குளிர்ச்சி தரும் திரை தடுப்புகள்:
பனை ஓலை, வெட்டிவேர் போன்றவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை பால்கனிகளிலும், ஜன்னல்களிலும் தொங்கவிட வீட்டின் உட்பகுதி குளிர்ச்சியாக இருக்கும். பார்ப்பதற்கும் நல்ல ரிச் லுக் கிடைக்கும். தனி வீடாக இருந்தால் மாடியில் தென்னை ஓலைகளையும், நீரில் நனைத்த சாக்கு பைகளையும் போட்டு வைக்கலாம். வசதி இருப்பின் மொட்டை மாடியில் பந்தல் போடலாம். மாடித்தோட்டம் அமைப்பது கூரையை மட்டுமல்லாமல் வீட்டையும் குளிர்ச்சியாக வைக்க உதவும். இதனால் வெயில் அதிகம் இறங்காமல் இருக்கும்.
ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகள்:
கோடை காலத்தில் வீட்டிற்குள் குளிர்ந்த காற்று வரும் என்று நினைத்து ஜன்னல் கதவுகளை திறந்து வைப்பது வழக்கம். இதனால் அனல் காற்று அதிகரித்து வீட்டிற்குள் உஷ்ணத்தை உண்டாக்கும். எனவே ஜன்னல் கதவுகளை மூடி ஜன்னல்களுக்கு வெளிர் நிற காட்டன் திரைச் சீலைகளைப் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
இண்டோர் பிளான்ட்:
பால்கனியில் ஈரமான மற்றும் கனமான துணிகளை ஈரத்துடன் கொடிகளில் போட்டு வைப்பது அனல் வீசும் வெப்பக்காற்றை தடுக்கும். பால்கனியில் பூச்செடிகள், குரோட்டன்ஸ் செடிகள் போன்ற பூந்தொட்டிகளை வைக்கலாம். இயற்கை சூழலை அப்படியே வீட்டிற்குள் கொண்டு வரும் வகையில் இண்டோர் பிளான்ட்களை வீட்டிற்குள் வைக்க கண்ணுக்கும் குளிர்ச்சி, வீட்டிற்கும் அழகு சேர்க்கும். வீட்டின் குளிர்ச்சிக்கு இண்டோர் பிளான்ட்களின் பங்கு மிகப் பெரியது.
குறுக்கு காற்றோட்டம்:
வெயில் அதிகம் இருக்கும் கோடை காலத்தில் ஜன்னல்களை திறப்பதற்கு உகந்த நேரம் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். அப்பொழுது வீட்டின் ஜன்னல்களை எதிரெதிர் முனைகளில் திறப்பதன் மூலம் வீட்டிற்குள் காற்று நன்கு வரும். குறுக்கு காற்றோட்டத்துடன் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.
குளிர் விளக்குகளை பயன்படுத்த:
எல்.ஈ.டி முதல் ஃப்ளோரசன்ட் விளக்குகள் வரை பல குளிர் விளக்குகள் உள்ளன. எனவே சூடான ஒளிரும் பல்புகளை பயன்படுத்தாமல் இவற்றை பயன்படுத்துவது அறையின் வெப்பநிலையை குறைக்கும். அதேபோல் அனைத்து மின் சாதனங்களையும் குறிப்பாக டிவி, கம்ப்யூட்டர் போன்றவை பயன்பாட்டில் இல்லாதபொழுது அணைத்து வைக்கவும். ஒரு மொபைல் சார்ஜர் கூட வெப்பத்தை வெளியிடும். எனவே தேவையில்லாத சமயங்களில் அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து வைப்பது நல்லது.
எல்லாவற்றிற்கும் மேலாக பருத்தி ஆடைகளை அணிவதும், நிறைய தண்ணீர் குடிப்பதும், குளிர்ச்சியான பழங்கள், மோர் மற்றும் வெள்ளரிப்பிஞ்சுகளை எடுத்துக் கொள்வதும் கோடையிலும் நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.