மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப குழந்தைகளின் திறன்களை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் பெற்றோர்கள் சில வழிமுறைகளக் கையாள வேண்டியது அவசியமாக உள்ளது. இளம் வயதிலேயே நம் பிள்ளைகளுக்கு இந்தத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுவது அவர்களுக்கு வாழ்நாளில் வெற்றியை தேடித் தரும். குழந்தைகள் தம் தொடர்புத் திறன்களை மேம்படுத்த உதவும் 6 சிறந்த வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. சுயக் கட்டுப்பாடு மற்றும் நினைவாற்றலைப் பெருக்குதல்: கவனச் சிதறல்கள் மற்றும் தகவல் சுமைகள் நிறைந்த உலகில் அவர்கள் தங்களுக்கான இலக்குகளை அடைய சுயக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அத்துடன் செய்யும் செயலில் கவனம் செலுத்துதல், சிந்திக்கும் தன்மை, நினைவாற்றல் ஆகியவற்றைப் பெருக்க விளையாட்டுத் தனமான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு கதையை பாதி சொல்லி, அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்கச் சொல்லலாம். ஒரு பாடலைப் பாடும்பொழுது ஒரு வார்த்தையை இடை நிறுத்தி, குழந்தைகளை அவர்களின் நினைவாற்றலை பயன்படுத்தி விடுபட்ட வார்த்தையை சேர்க்கச் செய்யலாம்.
2. தொடர்பு கொள்ளும் திறன்: மொழியைப் புரிந்துகொள்வது, எழுதுவது, வாசிப்பது, பிறர் பேசுவதை கூர்ந்து கவனிப்பது போன்ற திறன்களை வளர்க்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். பிறர் என்ன சொல்ல வருகிறார்கள், அவர்களின் கருத்துக்கள் என்ன போன்றவற்றை அறிந்துகொள்ள இது உதவும்.
3. பிள்ளைகளின் உணர்வுகளை ஊக்குவித்தல்: பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகள், உணர்வுகள், எண்ணங்கள், மற்றவர்களுக்கு எவ்வாறு பதில் அளிக்கிறார்கள் போன்ற திறன்களை உள்ளடக்கியது. பிள்ளைகள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் மற்றும் அவர்களுடைய தகவல் தொடர்புகளை மற்றவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் இந்தத் திறன் பயன்படும்.
4. விமர்சனப்போக்கு: எந்த ஒரு செயலையும் மதிப்பிட்டு, பகுப்பாய்வு செய்து அதைப் பற்றிய பார்வையும், அலசலும், விமர்சன சிந்தனையும் மிகவும் தேவை. விமர்சனப் போக்கை குழந்தைகளிடம் ஊக்குவிக்க ஒரு பிரச்னையைக் கூறி, அந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை அலசச் சொல்லலாம். அவர்களின் கருத்துக்களைக் கேட்கலாம். இது அவர்களின் ஆர்வத்தையும், விமர்சன சிந்தனையையும் தூண்டுவதாக இருக்கும்.
5. சவால்களை எதிர்கொள்ளப் பழக்குவது: வாழ்க்கை மன அழுத்தங்களும், சவால்களும் நிறைந்தது. சிலர் பிரச்னைகளுக்கு பயந்து சவால்களை தவிர்ப்பதும், ஒதுங்குவதும் உண்டு. அப்படிச் செய்யாமல் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை வளர்ப்பது முக்கியம். கடினமான சூழ்நிலையை கையாளும்பொழுது நம்பகமான நபர்களிடம் உதவி கேட்க குழந்தைகளை ஊக்குவிப்பதும், எதிர்ப்படும் பிரச்னையை தீர்க்க முயற்சிப்பதும் பிள்ளைகள் அவர்கள் வாழ்வில் சிறந்து விளங்க உதவும்.
6. புதுப்புது விஷயங்களை கற்கும் ஆற்றலை ஊக்குவிப்பது: குழந்தைகளுக்கு விருப்பமான விஷயங்களைக் கற்கவும், ஆராயவும் ஊக்குவிக்கலாம். அவர்களின் சமூக மற்றும் அறிவாற்றல் திறன்களை ஈர்க்கும் வழிகளில் கற்றலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது அவசியம். குழந்தைகள் முழு ஈடுபாடுடன் இருக்கும்பொழுது எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாகக் கற்றுக் கொள்வார்கள். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளும்பொழுது அவர்களின் சிந்தனை விரிவடையும். புதிய அனுபவங்கள் பெற முடியும்.