
1. உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை: வயதாக ஆகத்தான் வாழ்க்கையின் யதார்த்தம் புரிய ஆரம்பிக்கும். இதுநாள் வரை வாழ்ந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் சந்தோஷமான தருணங்கள் மனதில் அவ்வப்போது வந்து போனாலும் உடல் ஆரோக்கியம் என்பது மட்டுமே இந்த வயதில் மிகவும் பிரதானமாகத் தெரியும். நம்முடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் சுருங்கி விடுவதால் எளிய முறையில் வாழத் தோன்றும். இதனால் செலவுகள் அதிகம் இன்றி சிக்கனமாகக் கழியும்.
2. வயதிற்கேற்ற மரியாதையை மனம் எதிர்பார்க்கும்: பணம் மட்டுமே வாழ்க்கையாகாது என்பதை உணர்வதால் மனம் ஆரோக்கியத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்த ஆரம்பிக்கும். அத்துடன் பிறரிடம் வயதிற்கு ஏற்ற மரியாதையை மனம் எதிர்பார்ப்பதையும் உணர முடியும். தலைமுறை இடைவெளி என்பதன் அர்த்தம் தெரிய ஆரம்பிக்கும்.
3. பொருளாதார வசதி: பொருளாதார வசதியை நினைத்து மனம் கணக்கு போட ஆரம்பிக்கும். இன்னும் எத்தனை நாட்கள் நம் வாழ்க்கை இருக்கும்? அதுவரை நம்மிடம் இருக்கும் பொருளாதார வசதி போதுமா என்ற எண்ணம் அடிக்கடி வந்து போகும். யாரிடமும் கையேந்தி நின்று விடக்கூடாது என்ற தன்மானம் தலைதூக்கி நிற்கும். உடலுக்கு ஏதேனும் ஆரோக்கியக் குறைபாடு வந்து விடக்கூடாது என்ற பயமும் வந்து போகும். மனோதிடம் குறைவதை நன்கு உணர முடியும்.
4. இறுதி காலம் குறித்த பயம்: முதுமையில் இறுதிக் காலம் குறித்த பயம் வந்து போகும். தனிமை, உடல் ஆரோக்கியம் மற்றும் மரணம் குறித்து எதிர்மறையான எண்ணங்களும், பயங்களும் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியாது. மரணத்தை எதிர்நோக்கும் மனப்பக்குவம் வந்திருந்தாலும் மரணத்தில் நாம் முந்திக் கொள்வோமா அல்லது நமது மனைவி முந்திக் கொள்வாளோ, அப்படி ஏதேனும் நேர்ந்தால் தனிமையில் காலத்தை எப்படிக் கழிப்பது என்ற கேள்வியும் பயமும் மனதில் வந்து போகும்.
5. அனுபவ பகிர்தல்: இந்தக் காலத்துப் பிள்ளைகள் யாரும் அறிவுரையை விரும்புவதில்லை. எனவே, இவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணாமல் தங்களுடைய எண்ணங்களை நாகரிகமாக வெளிப்படுத்துவதில் தவறில்லை. அறிவுரையாகக் கூறாமல் அனுபவப் பகிர்தல்களாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அட்வைஸ் மழை பொழியாமல் இப்படி செய்தால் நன்றாக இருக்கும், அப்படிச் செய்தால் நன்றாக வரும் என்று அனுபவப் பகிர்தல் மூலம் வெளிப்படுத்த இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பி கேட்டுக் கொள்வார்கள்.
6. தன் கையே தனக்குதவி: அடுத்தவர்களுக்கு உதவுவது என்பதை விட, அடுத்தவர்களை தொந்தரவு செய்யாமல் வாழ்வது என்பது மிகவும் கடினமானது. எதற்கும் பிறர் கையை எதிர்பார்க்காமல் தன் கையே தனக்குதவி என்று இருந்து விட பிரச்னைகள் குறையும். யாரையும் எதிர்பார்க்காமல் நமக்கான தேவைகளை நாமே செய்து கொள்வது என்பது குடும்பத்தவர்கள் நம்மை பாரமாக எண்ணாமல் இருக்க உதவும்.