

மாணவர்களுக்கு எப்போதுமே எழும் சந்தேகங்கள் என்னவென்றால், ‘எந்த சமயத்தில் பாடங்களைப் படித்தால் நினைவில் நிற்கும்? படிப்பதற்கான சரியான சமயம் எது போன்றவைதான். இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முறையிலிருக்கும். சில பேருக்கு காலை, ஒரு சிலருக்கு மதியம் இன்னும் சிலருக்கு இரவு என கருத்துகள் வேறுபட்டிருக்கலாம். பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் காலையில் படிப்பதால் கீழ்க்கண்ட ஆறு நன்மைகள் உண்டாகின்றன என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மன அமைதி: அதிகாலை நேரத்தில் அனைவரது மனமும் அமைதியாக இருக்கும். இந்த நிலையில் படிக்கும்போது மன அழுத்தம் குறைக்கப்பட்டு படிப்பில் அதிக கவனத்தை செலுத்தி படிக்க முடியும். மேலும், கருத்துக்களை மிக எளிதாக ஒரு முறையிலேயே உள்வாங்கிக் கொள்ள முடியும்.
நீண்ட கால நினைவாற்றல்: காலையில் படிப்பதால் நினைவாற்றல் வலுப்படுத்தப்படுகிறது. நீண்ட நேர உறக்கத்திற்குப் பிறகு மூளை புத்துணர்ச்சியோடு இருப்பதால் நாம் படித்ததை நினைவில் எடுத்துப்கொள்ள அது திறம்பட செயல்படுகிறது. நீண்ட கால நினைவாற்றலையும் வலுப்படுத்துகிறது.
அதிக ஆற்றல் மற்றும் மன உறுதி: நீண்ட நேர உறக்கத்திற்குப் பிறகு மன உறுதியானது உச்சத்தை அடைகிறது. ஆகவே, காலை நேரங்களில் கடினமான பாடங்களைப் படித்தால், அதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு சுயக் கட்டுப்பாட்டையும் மன உறுதியையும் தருகிறது. காலையில் ஆற்றல் மிக அதிகமாக இருக்கும். நேரம் செல்லச் செல்ல அந்த ஆற்றலானது குறைந்து கொண்டே போகும். ஆகவே, காலை நேரத்தின் ஆற்றலை உபயோகப்படுத்தி படித்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
டிஜிட்டல் கவனச்சிதறல்கள்: காலையில் ஊடக சம்பந்தபட்ட செய்திகள் மிக மிக குறைவாகவே இருக்கும். அந்த நேரத்தில் படிப்பதால் டிஜிட்டலினால் ஏற்படும் கவனச் சிதறல்களைக் குறைக்கலாம்.
ஒழுக்கத்தை வளர்க்கலாம்: காலையில் எழுந்து படிப்பதால் ஒரு நிலையான ஒழுக்கமான முறையை கடைபிடிக்க முடியும். தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை வைத்து கொண்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
காலை நேரத்து சூரிய ஒளி: காலையில் எழுந்திருப்பதால் நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளியால் அமைதியான மனநிலையும் நினைவாற்றலும் வலுப்படுத்தப்படுகிறது. மேலும், காலை நேர சூரிய ஓளி circadian rhythms மற்றும் vitamin D லெவலை சீராக்க உதவுகிறது. இயற்கை ஓளியில் படிப்பதால் அறிவாற்றல் திறனும் நினைவாற்றலும் அதிகமாகிறது.
ஆகவே மாணவர்களே, காலையில் படிககும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திலேயே உங்களுக்கு அதற்கான வித்தியாசத்தையும் பலனையும் கண்கூடாகப் பார்க்கலாம்.