
குழந்தைகளை ஒரே நாளில் ஒழுங்கானவர்களாக மாற்ற இயலாது. இதற்கு அவர்களுக்கு கடுமையான விதிகளை விதிக்க வேண்டும். அந்த வகையில் குழந்தைகளை ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்றும் 6 விதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. நீங்கள் கலைத்ததை நீங்களே அடுக்கவேண்டும்
குழந்தைகள் பொருட்களை கலைத்து போட்டிருந்தால் அதை அவர்கள்தான் அடுக்கவேண்டும். தண்ணீரைக் கொட்டினால் அதை அவர்கள் தான் சுத்தம் செய்யவேண்டும். அவர்கள் படித்த புத்தகங்களை அவர்கள்தான் அடுக்கி வைக்கவேண்டும். ஒவ்வொரு குழந்தையும் சுத்தம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதி அவர்களுக்கு பொறுப்பைக் கொடுப்பதோடு, அவர்கள் கலைத்ததை வேறு யாரோ ஒருவர் அடுக்கித்தர மாட்டார்கள் என்பதை உணர்த்தும்.
2. உன்னுடையது அல்லாத பொருட்களை தொடாதே
குழந்தைகளுக்கு மற்றவர்களின் உடைமைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை புரிய வைக்க, உறவினர்களின் பொம்மையோ அல்லது நண்பரின் புத்தகமோ எதுவாக இருந்தாலும் அதை அவர்களின் அனுமதியின்றி உத்தரவின்றி தொடக்கூடாது. பெற்றோரின் பர்சை தொடக்கூடாது. மற்றவர்களின் உடைமைகளை மதிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும் போன்ற நேர்மையான கருத்துக்களை சொல்லி வளர்க்க வேண்டும் .
3. கவனமுடன் நட
பீரோ, கபோர்டுகள், டூத்பேஸ்ட், கதவு என நீ எதை திறந்தாலும், அதை நீதான் மூடவேண்டும் என்ற விதியை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி அதற்கேற்றவாறு அவர்களை உருவாக்க வேண்டும். வெளியே வரும்போது, தேவையற்ற லைட்கள் மற்றும் பேன்களை ஆஃப் செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த பழக்கங்கள் கவனமுடன் நடக்க வலியுறுத்தும்.
4. உரையாடலும், செல்போனும்
எப்போதும் குழந்தைகளுடன் பேசும்போது அவர்கள் செல்போன்களை வைத்துக்கொண்டு பதில் கூறக்கூடாது என்ற கடும் விதியை அவர்களுக்கு விதிக்க வேண்டும். இது அவர்களுக்கு கவனிக்கும் பழக்கம் மற்றும் மற்றவர்களை மதிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுக்கும்.
5. கடனாக வாங்கியதை கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும்
நண்பர்களின் புத்தகங்கள், பள்ளி ப்ராஜெக்ட் மற்றும் உடன் பிறந்தவர்களின் விளையாட்டு பொருள், என எதுவாக இருந்தாலும் மற்றவர்களின் பொருட்களை அதீத அக்கறையுடன் கவனமாக கையாள கற்றுக் கொடுக்க வேண்டும் . வாங்கிய பொருளை அதே போல் திருப்பிக் கொடுக்க கற்றுக் கொடுப்பது மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கும்.
6. பேசும்போது கவனம்
குழந்தைகள் பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேச அனுமதிப்பதோடு, தவறான வாக்குறுதிகளைக் கொடுக்கக்கூடாது அல்லது ஏதோ உளறிவிட்டுச் செல்லக்கூடாது என சொல்ல வேண்டும். இது அவர்களிடம் நேர்மை, அக்கறை, வலுவான தொடர்புகொள்ளும் திறன் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
மேலே கூறிய 6 விதிகளை குழந்தைகளுக்கு விதிக்க அவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக மாறுவார்கள்.