
முன்னொரு காலத்தில், மாதந்தோறும் மளிகை பட்டியல் தயாரித்து, அதன்படி கடைக்குச் சென்று தேவையான பொருட்களை மட்டும் வாங்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்று, சூப்பர் மார்க்கெட்டுகள் பெரிதும் பரவலாகிவிட்டதால், எதற்கும் திட்டமிடாமல் பல பொருட்களை அடுக்கு அடுக்காக வாங்கும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், நாம் திட்டமிடாத பொருட்களுக்கும் பணத்தை செலவழிக்கிறோம். இதைத் தவிர்க்க சில எளிய நடைமுறைகளை தெரிந்து கொள்வோமே.
1. வாங்கும் பொருட்களின் பட்டியல் தயார் செய்யுங்கள்
சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும் முன், வீட்டில் ஏற்கனவே உள்ள பொருட்களை பார்த்து, தேவையான பொருட்களின் பட்டியலை மட்டும் தயாரிக்க வேண்டும். இதனால் தேவையற்ற பொருட்களை வாங்காமல் தவிர்க்க முடியும்.
2. தேவையான அளவில் மட்டும் வாங்குங்கள்
வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்கு ஏற்ப பொருட்கள் வாங்குங்கள். இரண்டு பேர் இருக்கும் வீட்டுக்கு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்கத் தேவையில்லை. இருப்பினும், சலுகை விலையில் கிடைக்கும் பொருட்கள் நீண்ட நாள் வைத்திருக்கக்கூடிய தேவை இருந்தால், அவற்றை வாங்கி வைத்திருக்கலாம்.
3. விலை ஒப்பீடு செய்து தேர்வு செய்யுங்கள்
சூப்பர் மார்க்கெட்களில் பொதுவாக பல்வேறு பிராண்டுகளின் பொருட்கள் கிடைக்கும். இதனால், ஒவ்வொரு பொருளையும் ஒப்பிட்டு பார்க்கும் வசதி கிடைப்பதால், நம் தேவைக்கு ஏற்ப பொருத்தமானதை தேர்வு செய்யலாம்.
மேலும், ஒவ்வொரு பொருளின் எம்ஆர்பி விலை என்ன என்பதும், அது அதே விலையில்தான் விற்கப்படுகிறதா அல்லது அதைவிட குறைவாகவோ, அதிகமாகவோ விற்கப்படுகிறதா? என்பதையும் கவனமாக பார்க்க வேண்டும். இந்த வகையில் ஒப்பீடு செய்து, நமக்கு பொருத்தமான மற்றும் செலவுக்கேற்றதாக பொருட்களை தேர்வு செய்யலாம்.
4. மாதந்தோறும் செலவுகளை பதிவு செய்யுங்கள்
செலவுகளை ஒரு நோட்டில் அல்லது மொபைல் செயலியில் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவாகிறது என்பதை அறிந்து, அடுத்த மாதத்திற்கு திட்டமிடலாம். செலவு அதிகமாக இருந்த மாதங்களில் காரணங்களை ஆராயலாம்.
5. ஆடம்பர பொருட்களைத் தவிருங்கள்
நவீன வாழ்க்கைமுறையில் புதிய பிராண்டுகளின் விலை உயர்ந்த பொருட்கள் கண்ணை கவரும். விளம்பரங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் மற்றவர்களது மதிப்பீடுகள் ஆகியவை நம்மை அவற்றை வாங்கத் தூண்டக்கூடும். இருப்பினும், அந்த பொருட்கள் நம் உண்மையான தேவையை பூர்த்தி செய்யுமா? என்பது மிக முக்கியமான கேள்வி. ஆடம்பரம் இல்லாமல், நடைமுறை பயன்பாட்டிற்கேற்ப பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, சிக்கனமாக வாழும் பழக்கத்தை மேற்கொள்வது சிறந்தது.
6. பைகளை கொண்டு செல்லுங்கள்
இன்று பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கும்போது பையை இலவசமாக தருவது வழக்கமல்ல. பைகள் தேவைப்பட்டால் கூட அதை வாங்க பணம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். எனவே இந்தச் சிக்கலைத் தவிர்க்க நம்முடைய வீட்டிலிருந்து பைகளை முன்னரே எடுத்துச் செல்லும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இது செலவை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவியாக அமையும்.
இந்த வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட சிக்கனமாக பணத்தைச் செலவழிக்க முடியும். முன்னதாக திட்டமிடல் மற்றும் பொறுப்புடன் வாங்கும் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது, தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கும் வழியை வகுக்கிறது.